புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 19 ஏப்ரல் 2017 (11:19 IST)

அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய தினகரனுக்கு தடை: சி.வி.சண்முகம் அதிரடி!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைய தினகரனுக்கு தடை: சி.வி.சண்முகம் அதிரடி!

அதிமுகவில் இருந்தும் ஆட்சியில் இருந்தும் சசிகலா, தினகரன் குடும்பத்தை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நேற்று தெரிவித்தனர்.


 
 
அமைச்சர்களின் இந்த முடிவை ஒரு சில தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஏற்கவில்லை. இந்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர் இன்று மதியம் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் தினகரன் தலைமையில் நடைபெறும் என எம்எல்ஏ வெற்றிவேல் கூறினார்.
 
இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனும் அனைத்து எம்எல்ஏக்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். கட்சியில் தனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை, இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என கூறினார்.
 
இந்நிலையில் இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் தொடர்பாக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர், அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு தினகரன் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக தலைமை அலுவலகத்தில் தினகரனை அனுமதிக்கவும் மாட்டோம். கட்சியையும், இரட்டை இலையையும் மீட்பதே எங்களது நோக்கம் என்றார்.