1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (10:02 IST)

4வயது சிறுவனை கடித்த வெறிநாய்.. ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்ததால் பெற்றோர் அதிர்ச்சி..!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 4 வயது சிறுவனை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவத்தால் சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஜூன் 27ம் தேதி வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் நிர்மல் என்பவரை வெறி நாய் கடித்தது. இதையடுத்து சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் ரேபிஸ் நோய் தாக்கியதாகவும், இதையடுத்து  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் ரேபிஸ் நோயின் தாக்கம் தீவிரமடைந்து சிறுவன் நிர்மல் இன்று உயிரிழந்தார். சிறுவனின் உடல் அமரர் ஊர்தியில் இரவில் வீட்டுக்கு எடுத்து வராமல் நேரடியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

சாலையில் திரியும் வெறி நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் நாய் கடித்தால் அதிக பாதிக்கப்பட்டு வருவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Edited by Siva