1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2016 (13:18 IST)

இறந்ததாக கருதப்பட்ட பிறந்த குழந்தை இறுதிச் சடங்கில் கை, கால் அசைத்தால் பரபரப்பு

நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறந்ததாக ஒப்படைக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இறுதிச் சடங்கின்போது உயிர் பிழைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
 

 
நெல்லையில் இருந்து 30 கி.மீ.தொலைவில் உள்ள முனைஞ்சிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா. மளிகைக்கடை ஊழியர். இவரது மனைவி வடிவு. இவருக்கு பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இவருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை பெண் குழந்தை பிறந்தது. குழந்தை இறந்தே பிறந்ததாக கூறி, அதனை மருத்துவமனை ஊழியர்கள் வடிவின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தை இறந்துவிட்டதால் வேறுவழியின்றி, முனைஞ்சிப்பட்டியில் இறுதிசடங்கிற்காக குழந்தையை குளிப்பாட்டினர்.
 
மாலை 5 மணியளவில், குழந்தை கண்விழிந்து உடல் அசைந்தது. குழந்தைக்கு உயிர் இருப்பதை அறிந்த உறவினர்கள், உடனடியாக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்கு பிறகு நெல்லைக்கு அனுப்பிவைத்தனர்.
 
நெல்லையில் தனியார் முத்தமிழ் மருத்துவமனைக்கு ஒரு மாருதி வேனில் அழைத்துவந்தனர். மாலை 6.30 மணியளவில் குழந்தை அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
 
குழந்தையின் தாயார் தற்போதும் நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளார். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் ஆரம்பத்திலேயே முழுமையாக கவனித்திருந்தால் குழந்தை ஒருவேளை உயிர் பிழைத்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது.