திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 14 மே 2016 (10:51 IST)

பூத் சிலிப் இன்னும் பெறவில்லையா? ‘1950’ எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்புங்கள்!

தேர்தல் ஆணையம் வீடு, வீடாக பூத் சிலிப் (வாக்காளர் சீட்டு) வழங்கும் பணியை 12ஆம் தேதி நிறைவு செய்துவிட்டது. இன்னும் கணிசமானோர் பூத் சிலிப் பெறவில்லை.
 

 
அதேசமயம் போலி வாக்குப் பதிவை தடுத்து நிறுத்துவதற்காக வாக்காளர்களுக்குக் கொடுக்கப்படாத பூத் சிலிப்புகளை மூடி சீலிடப்பட்ட கவரில் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 
பூத் சிலிப் இல்லாவிட்டால் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பது சிரமம். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகளை கொண்டு சென்று வாக்களிக்கலாம். எனினும் ஒரு வாக்காளரின் வாக்குச்சாவடி, வாக்காளர் பட்டியலில் பாகம் எண், வரிசை எண்ணை அறிவது தாமதமாகலாம். இதனால் வாக்களிக்க முடியாத நிலையும் உருவாகலாம்.
 
இதனால், பூத் சிலிப் பெறாத வாக்காளர்கள் அந்த விபரத்தை எஸ்.எம்.எஸ். மூலம் பெறலாம். மேலும், தேர்தல் ஆணைய தொடர்பு எண்ணான 1950 என்ற எண்ணுக்கு தங்கள் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
 
அனுப்பினால் சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடி, பாகம் எண், வரிசை எண், எந்த அறை என்பது உள்ளிட்ட விபரங்கள் வந்துவிடும். இதன் மூலம் சிரமம் இல்லாமல் வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்லலாம்.