1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 டிசம்பர் 2017 (13:24 IST)

ஆர்.கே.நகர் எதிரொலி : எடப்பாடி - தினகரனை இணைக்கும் முயற்சியில் பாஜக?

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க திட்டம் தீட்டியது. அதற்காகவே, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அதன் பின் அது எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது.
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுகவே வெற்றி பெரும் என. தோல்வியை சந்திக்கும் தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போகும் என பாஜகவும், எடப்பாடி தரப்பும் கணக்குப் போட்டது. ஆனால், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றார் தினகரன். இது எடப்பாடிக்கும், பாஜக தலைமைக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், நேற்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற தினகரன், இன்னும் 3 மாதங்களில் ஆட்சி கலையும். எனவே, அதற்குள் திருந்தி விடுங்கள் என நேரிடையாகவே எச்சரிக்கை விடுத்தார். மேலும், கட்சியை கைப்பற்றும் முயற்சிகளில் தினகரன் தீவிரமாக ஈடுபடுவார் எனத் தெரிகிறது. அதோடு, எடப்பாடி பக்கம் உள்ள பல எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் சாய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
அப்படி நடந்தால் அதிமுகவின் தலைமையாக தினகரன் மாறுவார். ஏன்? அவரே முதல்வராகவும் நியமிக்கப்படலாம். இதை மோப்பம் பிடித்த பாஜக தலைமை, தற்போது வேறு வழியில்லாமல் தினகரனையும், எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது பாஜகவிற்கு எதிரான மனநிலையில் இருக்கும் தினகரனுக்கு, அதிமுகவின் தலைமை பதவியை கொடுப்பதோடு, டெல்லி மேலிடமும் டீல் பேசினால் அதற்கான இணக்கமான மனநிலைக்கு மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அது அரசியல்வாதிகளின் பொதுவான குணம்தான்.
 
வழக்குகள், வருமான வரித்துறை, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு என ஏற்கனவே தினகரனுக்கு மத்திய அரசு குடைச்சல் கொடுத்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க தினகரனும் அந்த நிலைப்பாட்டை கையில் எடுக்கலாம்.
 
எனவே, தினகரன் - எடப்பாடி- ஓபிஎஸ் ஆகியோரை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடும் எனத் தெரிகிறது.

நடிகர் கவுண்டமணி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது “அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா”