சிவராமன் உயிரிழந்தது குறித்து கவலையில்லை.. ஆனால்.. பாஜக பிரமுகரின் கோரிக்கை..!
சிவராமன் உயிரிழந்தது குறித்து தனக்கு கவலை இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் சிவராமன் உயிர் இழந்ததை வைத்து மற்ற குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்றும் பாஜக பரமுகர் நாராயணன் திருப்பதி தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
பர்கூர் கிங்ஸ்லி மெட்ரிக் தனியார் பள்ளியில்பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த சிவராமன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்கொலைக்கு முயன்று பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிக கொடூரமான குற்றத்தை செய்த அந்த நபர் உயிரழந்தது குறித்து நமக்கு கவலையில்லை. ஆனால், அந்த குற்றத்திற்கு துணை நின்ற, கண்டும் காணாமல் இருந்த அந்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோர் இந்த நபரின் மறைவு காரணமாக தண்டனையிலிருந்து தப்பிக்காமல் இருப்பதை தமிழக காவல் துறை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இந்த குற்றத்திற்கு அந்த பள்ளியின் நிர்வாகமே முழு பொறுப்பு. பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட வேண்டும். அந்த பள்ளி ஒரு அறக்கட்டளையின் மூலம் நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படும் நிலையில், அந்த பள்ளியின் நிர்வாகம் அந்த அறக்கட்டளையிலிருந்து விலக்கப்பட்டு, தமிழக அரசே பள்ளி நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும். அரசு அந்த பள்ளியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பின்னரே பள்ளி திறக்கப்பட வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் உடனடியாக இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
Edited by Mahendran