திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (12:34 IST)

ஆட்சி கலைப்பை தடுக்க தமிழக சட்டசபை முடக்கம்? - மத்திய அரசு வியூகம்

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் ஆட்சி கலைப்பு ஏற்படுவதை தடுக்க, தமிழக சட்டசபை சஸ்பெண்டு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன்  தன்னுடை ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவர்கள் அனைவரும் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். 
 
மேலும், எடப்பாடி அணியின் பக்கம் தங்களின் ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் நிறைய பேர் இருப்பதாகவும் கூறி தினகரன் பயமுறுத்தி வருகிறார். 
 
சமீபத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி தலைமையில் நடந்த கூட்டத்தில் 44 அதிமுக எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள்தான் தினகரன் கூறிய ஸ்லீப்பர் செல்களா என்ற சந்தேகம் பாஜக தலைமைக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
எனவே, தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்து, அது ஆட்சி கலைப்பிற்கு வழிவகுக்க வாய்ப்பிருப்பதாக பாஜக மேலிடம் கருதுகிறது. மேலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது எடப்பாடி நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது. அதோடு, திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் சஸ்பெண்டு செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஏதேனும் நடந்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் ராஜினாமா செய்தால் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும். எனவே, அடுத்த 6 மாதத்தில் தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
 
இதை மத்திய அரசு விரும்பவில்லை எனத் தெரிகிறது. 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரை எடப்பாடி தலைமையிலான அரசு தொடர வேண்டும் என பாஜக விரும்புகிறது.


 

 
எனவே, ஆட்சி கலைப்பை தடுக்க தமிழக சட்டசபை சில நாட்களுக்கு முடக்கி வைக்கப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எடப்பாடி அரசுக்கு சிக்கல் தீர்ந்து, தமிழக அரசியலில் குழப்பம் நீங்கியதும் மீண்டும் சட்டசபை இயங்கும் எனத் தெரிகிறது. 
 
இதற்கு முன் இதுபோன்ற நடவடிக்கையை பல மாநிலங்களில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டசபை இதுவரை முடக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.