1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2017 (11:59 IST)

நான் தான் உண்மையான ஜெயலலிதா மகள்; பிரதமருக்கு கடிதம் எழுதிய பெண்

நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.


 

 
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா(38) என்ற பெண் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில், என் பெயர் மஞ்சுளா என்ற அம்ருதா. என்னை செல்லமாக அம்மு என்று அழைப்பர். பெற்றோரை இழந்த என் தாய் மன அழுத்தத்துக்கு ஆளானார். அப்போது தெலுங்கு நடிகர் சோபன்பாபு என் தாய் மீது அதிக அக்கறை காட்டினார். அவர்கள் இடையிலான நட்பு காதலாக மாறியது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 
 
கர்ப்பமாக இருந்த என் தாய் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி என்னை பெற்றெடுத்தார். ஜெயலலிதா, சோபன்பாபு உறவை ஏற்க குடும்பத்தினர் மறுத்தனர். இதனால் ஜெயலலிதா தன் குழந்தையை தன் சகோதரி சைலஜாவிடம் ஒப்படைத்தார். சைலஜா - சாரதி தம்பதியினர் என்னை சொந்த மகளாகவே வளர்த்து வந்தனர். 
 
ஆனால், நான் ஜெயலலிதாவின் மகள் என்ற ரகசியத்தை எங்கும் கூறவில்லை. அவர்களிடம் ஜெயலலிதா சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிகிறது. 1996ஆம் ஆண்டு ஒரு சீட்டு எழுதி கொடுத்த சைலஜா சென்னை சென்று என்னை ஜெயலலிதாவை சந்தித்து வரும்படி கூறினார். நானும் போயஸ் கார்டன் சென்று அவரை சந்தித்தேன். 
 
என்னை பார்த்தவுடன் வாரி அனைத்து பாசத்தை காட்டி உபசரித்தார். இது எனக்கு ஆச்சரியம் அளித்தது. அதன்பின் பலமுறை அவரை சந்தித்தேன். ஆனால் ஒரு முறை கூட என் சொந்த தாய் என்று கூறியதில்லை. எந்த காரணத்தினாலும் அரசியல் மற்றும் சினிமாவுக்கு வரவேண்டாம் என என்னை எச்சரித்தார்.
 
ஜெயலலிதா இறந்த பின் தீபா, தீபக் ஆகியோர் தான் என் அம்மாவின் சொத்துக்கு வாரிசுகள் என செய்தி வெளியானது. இதைப்பார்த்த அமெரிக்காவில் உள்ள என் உறவினர் ஜெயலட்சுமி, ஜெயலலிதாவின் ஒரே மகள் நான் தான் என்பதை என்னிடம் கூறினர். 
 
ஜெயலலிதாவின் இறப்பு இயற்கையான மரணம் அல்ல. உடல்நிலை பாதிப்பாலும் அவர் இறக்கவில்லை. என் தாய இறப்புக்கு சசிகலா உள்பட பலரும் காரணம். இதுதொடர்பாக உச்ச் நீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ சிறப்பு குழு விசாரணை நடத்த வேண்டும். என் தாய் அவர்தான் என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. என்னும் மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.