திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J. Durai
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (15:48 IST)

கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் இடையிலான இரவு மின்சார ரயில் சேவை ரத்து!

பராமரிப்பு காரணமாக இன்று முதல் கடற்கரை ரயில் நிலையம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையிலான இரவு மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது.


இன்று முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் நாளின் கடைசி இரவு நேர ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறு மார்க்கமாக தாம்பரத்திலிருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இரவு வரை பணி, வியாபாரம் செய்து முடித்துவிட்டு வீடு திரும்புவோர் பலர் இந்த கடைசி ரயிலை பயன்படுத்தி வந்த நிலையில், இந்த சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மாற்று போக்குவரத்து வழியை நாடும் நிலை ஏற்பட்டு உள்ளது.