1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: திங்கள், 10 நவம்பர் 2014 (08:47 IST)

தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தடையை மீறி சீருடை அணிந்து ஊர்வலம் செல்ல முயன்றதால் காவல் துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.
 
ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆவது ஆண்டு தொடக்க விழா, ஆர்.எஸ்.எஸ்., தொடங்கியதன் 90ஆவது ஆண்டு, விவேகானந்தரின் 159 ஆவது பிறந்த நாள், மற்றும் வல்லபாய் படேலின் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் நடத்தஊர்வலம் நடத்த  ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டிருந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், திருவண்ணாமலை காமராஜர் சிலை பகுதியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் திரண்டனர். பின்னர், தொண்டர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து ஊர்வலத்துக்குத் தயாராகினர்.
 
அப்போது, பாதுகாப்புக்காக வந்திருந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறினர்.
 
ஆனால் அதையும் மீறி  ஊர்வலம் செல்ல முயன்ற ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், மற்றும் தொண்டர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
கைது செய்யப்பட்ட அனைவரும் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இரவு 9 மணிக்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், விருதுநகரில் ஊர்வலம் செல்வதற்காக சீருடையில் வந்த 142 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை மீறி சீருடையில்  ஊர்வலம் செல்முயன்ற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
 
முன்னதாக, வன்முறை ஏற்படும் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் ஊர்வலம் நடத்த காவல் துறையினர் அனுமதிதர மறுத்தனர். இதைத் தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமசுப்பிரமணியம் காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ்.க்கு அனுமதி அளித்தார்.
 
சீருடையுடன் வரமாட்டோம் என்றும், கம்புகளை ஏந்தி வர மாட்டோம் என்றும் உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் தடையை மீறி சீருடையில் ஊர்வலம் செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.