வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 16 ஜூன் 2015 (13:21 IST)

பெப்சி, கோக், கேஎப்சி உணவுகளை தடை செய்ய சொல்கிறார் அன்புமணி

பெப்சி, கோக் குளிர்பானங்கள், கேஎப்சி உணவுகளை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்திய சந்தைகளில் பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களையும் சோதனைக்கு உட்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் ஆணையிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கடந்த காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் தரமற்றவை என்று நிராகரிக்கப்பட்ட 500 பொட்டல உணவுப் பொருட்களின் பட்டியலையும் மாநில அரசுகளிடம் ஒப்படைத்து அவற்றின் விற்பனையை தடுக்கும் படியும் ஆணையிட்டிருக்கிறது.
 
நூடுல்ஸ் வகைகளில் காரீயமும், உடல் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சுவையூட்டிகளும் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து மேகி உள்ளிட்ட பல நூடுல்ஸ் வகைகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன. பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் மற்ற உணவுப் பொருட்களிலும் ஏதேனும் நச்சுப் பொருட்கள்  கலந்திருக்குமோ? என்று மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில், அதைப் போக்கும் வகையில் அனைத்து பொட்டல உணவுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் உத்தரவிட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.
 
இந்திய சந்தைகளில், குறிப்பாக தமிழகத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான குழந்தை உணவுகளும், நொறுக்குத் தீனிகளும் அறிமுகப்படுத்தப்படுகின்றன. இவை ஏதேனும் தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனவா? என்பது குறித்து எந்த தகவலும் அவற்றின் உறைகளில் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, குழந்தைகளை கவர்ந்திழுக்கும் வகையில் விளம்பரங்கள் செய்யப்படுவதால் அவற்றை குழந்தைகள் ஆர்வத்துடன்  வாங்கி உட்கொள்கிறார்கள். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? என்பதை கண்டறிய  இந்த ஆய்வுகள் பேருதவியாக இருக்கும்.
 
அதே நேரத்தில், பொட்டலங்களில் அடைத்து விற்பனை செய்யும் உணவுப் பொருட்களைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்களின் விற்பனையை முறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. கோக், பெப்சி ஆகிய இரு குளிர்பானங்களில் மிக மோசமான நச்சுக்கள் கலந்துள்ளன. இந்த இரு குளிர்பானங்களிலும், இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் ஃபாண்டா, தம்ப்ஸ்-அப், மிரிண்டா, 7அப், ஸ்பிரைட் போன்ற குளிர்பானங்களிலும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய, நோய் எதிர்ப்பு சக்தியை சிதைக்கக்கூடிய பூச்சிக் கொல்லி மருந்துகள் கலந்திருப்பது ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ராஜஸ்தானில் இப்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்திலும், பஞ்சாப் சட்டப்பேரவை வளாகத்திலும் உள்ள உணவகங்களில் கோகோ கோலா, பெப்சி போன்ற பன்னாட்டு தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
 
ஒரு புட்டி கோக்கில் 8 டீ ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை கலந்துள்ளது. இதனால், இதைக் குடிக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கோகோ கோலா மற்றும் பெப்சியில் கரும் பழுப்பு நிறத்தைக் கொண்டு வருவதற்காக சேர்க்கப்படும் கேரமல் எனப்படும் நிறமியால் நுரையீரல், கல்லீரல், தைராய்டு உள்ளிட்ட பலவகை புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த குளிர்பானங்களைத் தொடர்ந்து குடித்தால் எலும்புப்புரை நோய் ஏற்படும்.
 
இந்த நோய் ஏற்பட்டவர்களின் எலும்புகள் வலுவிழந்து எந்த நேரமும் முறியும் ஆபத்துள்ளது. இவற்றைத் தாண்டி மேலும் பல ஆபத்துக்களும் இந்த குளிர் பானங்களில் உள்ளன. அதையெல்லாம் அறிந்திருந்தும்  இந்த வகை குளிர்பானங்களை தடையின்றி விற்பனை செய்ய அரசு அனுமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
 
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நச்சுக் கலப்பில்லாத பெப்சி, கோக் விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தியாவில் மட்டும் அவற்றைவிட 30 மடங்குக்கும் கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட பெப்சியும், கோக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மக்கள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது.
 
அதேபோல், அமெரிக்க நிறுவனமான கேஎப்சி கேரளத்தில் உள்ள கிளையில் விற்பனை செய்த கோழி இறைச்சி உணவில் புழுக்கள் நெளிந்ததாக புகார் எழுந்ததையடுத்து அந்த கடை மூடப்பட்டது. அமெரிக்காவில் கழிக்கப்பட்ட கோழிக் கால்களை இங்கு கொண்டு வந்து கேஎப்சி விற்பனை செய்வதாகவும், அதில் ஏராளமான சுகாதாரக் கேடுகள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. எனவே, கோகோ கோலா, பெப்சி போன்ற குளிர்பானங்கள், கே.எஃப்.சி கோழி இறைச்சி உணவு வகைகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவற்றில் நச்சுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். மற்றொரு புறம், கோக், பெப்சி மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் நொறுக்குத் தீனிகள் குறித்து மக்களிடையே தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழகத்திலுள்ள பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் இவற்றை தடை செய்ய வேண்டும்.