வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 20 டிசம்பர் 2014 (17:05 IST)

ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனத்துக்குத் தடை

வருகின்ற ஆங்கில புத்தாண்டு தினத்தன்று நட்சத்திர விடுதிகளில் ஆபாச நடனத்திற்கு காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
 
வரும் ஜனவரி -1ஆம் தேதி, 2015 புத்தாண்டு பிறக்க உள்ளது. இந்தப் புத்தாண்டைக் கொண்ட்டாடுவதற்கு சென்னை நகரம் தயாராகி வருகிறது. அன்றைய தினம் நட்சத்திர ஓட்டல்களில் மது விருந்துடன் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டங்கள் நடைபெறும்.

 
நட்சத்திர விடுதிகளில் அசம்பாவிதம் இல்லாமல், ஆர்ப்பரிப்போடு புத்தாண்டு விழாவை எவ்வாறு கொண்டாட அனுமதிப்பது என்பது தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று காவல்துறை உயர் அதிகாரிகள், நட்சத்திர விடுதிகளின் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள்.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு:
 
புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகள் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு 1 மணிவரை நடத்த தடையில்லை. விடிய, விடிய தூங்கா இரவாக விருந்து நடத்தக்கூடாது.
 
புத்தாண்டு விருந்து நிகழ்ச்சிகளில் நடக்கும் நடனத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது உள்ளிட்ட ஆபாச நடனத்தை அனுமதிக்கக்கூடாது. நடனத்தின்போது விசில் அடித்து ரகளை செய்வது, அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கி பாடல்களை ஒலிபரப்பக்கூடாது.
 
நடன நிகழ்ச்சிகளை விடுதி நிர்வாகத்தினர் வீடியோ படம் பிடிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில், விடுதி நிர்வாகத்தினர் அதிக கவனம் செலுத்தவேண்டும். மது விருந்து கூடம் தனியாகவும், நடன நிகழ்ச்சி தனியாகவும் இருக்க வேண்டும். மது அருந்தும் இடங்களில் நடனமாட அனுமதிக்கக்கூடாது.

 
முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்கு விடுதி நிர்வாகமே பொறுப்பு ஏற்கவேண்டும்.
 
விருந்து நடக்கும் நட்சத்திர விடுதிகளில் நீச்சல் குளத்தை மூடி விடவேண்டும். நீச்சல் குளத்தின்மேல் நடன மேடை அமைக்கக் கூடாது. தற்காலிக நடன மேடை அமைத்தால் நல்ல ஸ்திர தன்மையுடன் அமைக்கவேண்டும்.
 
விருந்து நிகழ்ச்சிகளில் வெளிநாட்டினர் கலந்து கொண்டால், அவர்கள் பற்றிய விவரங்களை விடுதி நிர்வாகத்தினர் சேகரித்து வைத்திருக்க வேண்டும். மது அருந்தி மயக்கத்தில் இருப்பவர்களை வாகனம் ஓட்டிச்செல்ல அனுமதிக்க கூடாது.
 
விடுதி நிர்வாகத்தினர் உரிய வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும். விருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை பார்வையிட, போலீஸ் அதிகாரிகளை அனுமதிக்கவேண்டும். வாகனம் நிறுத்தும் இடங்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகளை பின்பற்றுமாறு உத்தரவிட்டனர்.