வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2017 (08:45 IST)

புதிய திருப்பம்; ஜல்லிக்கட்டிற்கு எதிரான மனுக்களை வாபஸ் பெற வேண்டும் : விலங்கு நல வாரிய செயலாளர் வேண்டுகோள்

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என விலங்குகள் நல வாரிய செயலாளரே வேண்டுகோள் விடுத்த விவகாரம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகம் முழுவதும் நடந்த தீவிரமான போராட்டத்தையடுத்து, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்பின், கடந்த 23ம் தேதி தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டிற்கான நிரந்தர சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
இந்நிலையில், தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக, மத்திய அரசின் மேற்பார்வையில் செயல்படும் விலங்குகள் நல வாரியம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் பரவியது. அந்த மனுக்கள் வருகிறது 30ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டது.
 
தமிழக அரசின் சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அழைப்போம் என மத்திய அரசு கூறியிருந்தது. எனவே, தமிழக அரசின் அவசர சட்டமும், அதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட நிரந்தர சட்ட மசோதாவும், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் நிரந்தர தீர்வாக அமையும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், விலங்கு நல வாரியம் சார்பில் வழக்கு தொடர்ந்திருப்பது தமிழக மக்களுக்கும், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப்பெற வேண்டும் என அந்த வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
ஜல்லிக்கட்டை பொறுத்தவரை விலங்கு நல வாரியத்தின் அனுமதி இருந்தால் மட்டுமே வழக்கு தாக்கல் செய்யவேண்டும். இந்நிலையில், தமிழக அரசு கொண்டு வந்த நிரந்தர சட்ட மசோதாவிற்கு எதிராக விலங்குகள் நல அமைப்பின் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்கள் மூலம் அறிந்தோம்.
 
விலங்கு நல வாரியத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்திருந்தால், அதை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். வழக்கு தொடாருவதாக இருந்தால் நாங்கள் அதை உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனக் கூறியுள்ளார்.
 
எனவே, ஜல்லிக்கட்டு நீடிக்குமா? என்ற அச்சத்தில் தமிழக மக்கள் இருந்த நிலையில், விலங்குகள் நல வாரியத்தின் செயலாளரின் அறிக்கை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், ஜல்லிக்கட்டிற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என எதிர்பார்க்கப்படுகிறது.