அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்துக் கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றி தந்ததுடன், சமூகத்தில் ஓருபடி அந்தஸ்தை உயர்த்திய குருபகவான் இப்போது 02.8.2016 முதல் 1.09.2017 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. சகட குருவாச்சே! எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும், வீண் பழிகளையும் உண்டாக்குவாரே! என்று கலங்காதீர்கள்.
அதன்படி எதிலும் சின்ன சின்ன இழப்பங்களும், மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அதற்காக அஞ்ச வேண்டாம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று எப்போது நினைத்தாலும் முடியாமல் போகும். செலவினங்கள் அதிகமாகும். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், வயிற்று உப்புசம், சிறுசிறு அறுவை சிகிச்சைகளெல்லாம் வந்துப் போகும். சில பல நோய்கள் இருப்பதாக யூகிப்பீர்கள். உரிய மருத்துவரை அணுகி தக்க சமயத்தில் மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது.
சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். ஒரு விஷயத்தை செய்வதென்றால் அது முடியாவிட்டால் அடுத்தது என்ன செய்யலாம் என்று முன்னரே யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் சச்சரவுகள் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க முயற்சி செய்வார்கள். அவர்களின் பேச்சை கேட்டு மனைவியை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம்.
பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். உறவினர்களுக்காக நாம் எவ்வளவு கொடுத்து உதவினாலும் நமக்கு நல்ல பெயர் இல்லையே என்றெல்லாம் ஆதங்கப்படுவீர்கள். பல காலமாக நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட உங்களை தவறாகப் புரிந்துக் கொண்டு விலகுவார்கள். சமூகத்தின் மீதும் சின்ன சின்ன கோபமெல்லாம் வந்து நீங்கும். உங்கள் குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.
உங்கள் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்க சிலர் முயற்சி செய்வார்கள். கவனமாக இருங்கள். முக்கிய நிகழ்ச்சிகளை தவிர மற்ற விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. பாதை மாறிச் செல்பவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கடனை நினைத்தும் கலங்குவீர்கள். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள்.
காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விவகாரத்தில் கோர்ட், வழக்கு என்று நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்காதீர்கள். மனைவிக்கு தைராய்டு, ஃபைப்ராய்டு, கர்பப்பை வீக்கம், அப்ரண்டீஸ் வரக்கூடும். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்கவோ, சாலைகளைக் கடக்கவோ வேண்டாம். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். வங்கிக் கணக்கில் இருப்பை அறிந்து கொண்டு காசோலை கொடுங்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை பார்ப்பதால் இழுபறி நிலை மாறும். கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வருமோ, வராதோ என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்தப் பிணக்குகள் நீங்கும். மற்றவர்களின் மனதைப் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்யம் சீராகும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் மாறுபட்ட யோசனையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வில் வெற்றிப் பெற்று அப்பாயிண்ட் ஆர்டருக்காக காத்திருந்தவர்களுக்கு அழைப்பு வரும். டிரெஸ்ட், சங்கம், இயக்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஊர் பொதுக் காரியங்களையெல்லாம் எடுத்து நடத்துவீர்கள். வேற்று மதத்தவர், மாநிலத்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டை பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
02.8.2016 முதல் 19.9.2016 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால் குழந்தை பாக்யம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். அதிக வட்டிக் கடனை தீர்க்க புதுவழி பிறக்கும். நட்பு வட்டம் விரியும்.
20.9.2016 முதல் 24.11.2016 மற்றும் 28.6.2017 முதல் 14.7.2017 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நல்ல காற்றோட்டம், குடி நீர் வசதியுள்ள வீட்டிற்கு குடிப் புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான கசப்புணர்வுகளும் நீங்கும். கலை, இசையில் நாட்டம் அதிகரிக்கும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். கோழித்தூக்கம் போய், இனி நிம்மதியான குறட்டைத் தூக்கம் வரும்.
25.11.2016 முதல் 16.1.2017 மற்றும் 15.7.2017 முதல் 1.09.2017 வரை உங்கள் ராசிநாதனும்-அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குருபகவான் செல்வதால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருந்துக் கொண்டேயிருக்கும்.
17.01.2017 முதல் 21.2.2017 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனைவிவழியில் மதிப்புக் கூடும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 02.5.2017 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 03.5.2017 முதல் 27.6.2017 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, சகோதர வகையில் மனவருத்தம், சிறுசிறு நெருப்புக் காயங்கள், இனந்தெரியாத கவலை, சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள், வழக்கால் நிம்மதியின்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். ஆனால் பணவரவு குறையாது. முன்னேற்றம் தடைபடாது.
வியாபாரிகளே! ஏற்ற-இறக்கங்கள் இருந்துக் கொண்டேயிருக்கும். திடீரென்று அறிமுகமாகுபவர்களை நம்பி எந்த முதலீடுகளும் செய்ய வேண்டாம். சந்தை நிலவரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். வேலையாட்களை வேலைக்கு வைக்கும் போது அவர்களை நன்றாக விசாரித்துவிட்டு பணியில் சேர்ப்பது நல்லது. இல்லையென்றால் உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள் அறிமுகம் செய்து வைப்பவர்களை வேலையில் சேர்த்துக் கொள்வது நல்லது. பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். கடையை மாற்ற வேண்டாம். இருக்கும் இடத்திலேயே தொடர்வது நல்லது. கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்யோகஸ்தர்களே! வேலைச்சுமையால் மனஇறுக்கம் உண்டாகும். தன்நிலையை தக்க வைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருக்கும். உங்கள் உழைப்பை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். உயரதிகாரிகளின் பார்வை உங்கள் மீது திரும்பும். அவர்களிடம் உஷாசாராக இருங்கள்.
நன்றி மறந்த சக ஊழியர்களை நினைத்து கொஞ்சம் ஆதங்கப்படுவீர்கள். சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றிய தவறான வதந்திகளைப் பரப்புவார்கள். நீங்கள் வேலைப் பார்க்கும் நிறுவனத்தை வேறு நிறுவனம் வாங்க வாய்ப்பிருக்கிறது. விரும்பத்தகாத இடமாற்றங்களெல்லாம் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வழக்கு தொடுக்க வாய்ப்பிருக்கிறது. நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகளெல்லாம் சற்று தாமதமாகும்.
கன்னிப் பெண்களே! கல்யாணம் தாமதமாகும். காதல் விஷயத்திலும் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் போகும். கொஞ்சம் தள்ளியே இருங்கள். எஸ்.எம்.எஸ்., இமெயிலை கவனமாக கையாளுங்கள். முன்பின் தெரியாத நபர்களை நம்பி சொந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தைராய்டு பிரச்னை, வயிற்று வலி, தோலில் அலர்ஜி வந்துப் போகும். பெற்றோருக்கு தெரியாமல் எந்த நட்பும் வேண்டாம். சிலருக்கு வேலை அமையும்.
மாணவ-மாணவிகளே! தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். விடைகளை எழுதிப்பாருங்கள். கூடாப்பழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கட்டுரை, பேச்சு, இலக்கிய போட்டிகளில் பரிசு பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய பாடப் பிரிவில் சேர சிலரின் சிபாரிசை நாடுவீர்கள்.
கலைத்துறையினரே! போட்டிகள் இருக்கும். வதந்திகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்பிற்கு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.
அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி மேடையில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்குவீர்கள். தலைமையை மீறி எந்த முயற்சியிலும் இறங்க வேண்டாம்.
இந்த குருமாற்றம் முயன்று தவறி ஒரளவு முன்னேற வைக்கும்.
பரிகாரம்:
உளுந்தூர் பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை துவாதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். ஆதரவற்ற முதியவருக்கு உதவுங்கள்.