1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (16:26 IST)

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மாநில அரசின் அதிகாரத்தை பிரதமர் உறுதி செய்வார் என நம்புகிறேன் - அற்புதம்மாள்

பிரதமர் மோடி எனது மகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், விடுதலையில் மாநிலத்துக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கிறேன் என்று பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கூறினார்.
 
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார்.
 
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:– எனது மகனின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த சதாசிவம் உத்தரவிட்டார். பேரறிவாளனின் விடுதலையை மாநில அரசு முடிவு செய்யலாம் எனவும் உத்தரவிட்டார்.
 
இதையடுத்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளனை விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார். மத்திய அரசிடம் விடுதலையை பற்றிய ஆலோசனையையும் கேட்டிருந்தார்.
 
ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பழிவாங்கும் நோக்கில் எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து விடுதலையை தடுத்தது. தற்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
மூன்று முறை குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடிக்கு மாநிலத்தின் அதிகாரம் பற்றி தெரியும். அவர் எனது மகனின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், விடுதலையில் மாநிலத்துக்கு உள்ள அதிகாரத்தை உறுதி செய்வார் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் கூறினார்.