வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 21 அக்டோபர் 2016 (15:39 IST)

இன்று வெளியாகிறது ஜெயலலிதா உடல்நிலை குறித்த அப்பல்லோ ’ரிப்போர்ட்’?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 4 வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்குவது, சுவாச உதவி உபகரணப் பயன்பாடு உள்ளிட்ட விரிவான மருத்துவ சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்படுகிறது. மருத்துவ நிபுணர் குழுவினர் முதலமைச்சருக்கு, உரிய மருத்துவப் பரிசோதனைகளை, தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அளிக்கப்பட்டுவரும் சிகிச்சையை, தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.
 
மருத்துவர்கள், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கிலானி, மயக்க மருந்தியல் நிபுணர் டாக்டர் அஞ்சன் ட்ரிஹா மற்றும் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர், முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து, அப்பலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினர்.
 
எய்ம்ஸ் மருத்துவ நிபுணர் குழுவினர், முதலமைச்சருக்கு மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தினர். படுக்கையில் இருந்து அவ்வப்போது நிமிர்ந்து உட்காரும் அளவுக்கு அவரை தயார்படுத்திவிட்டனர் மருத்துவர்கள். ஆனால், சிகிச்சைக்கான மருந்துகளை மிகவும் தாமதமாகத்தான் அவரது உடல் ஏற்றுக் கொள்கிறது.
 
எனவே, படிப்படியான முன்னேற்றத்தை நோக்கித்தான் சிகிச்சை முறைகள் செல்கின்றன. ஜெயலலிதாவின உடல்நிலையில் அவ்வப்போது ஏற்றம் இறக்கம் தெரிந்தாலும், இன்றைய நிலவரப்படி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிவதாக சொல்லப்படுகிறது.
 
இன்று செய்தியாளர்களுக்கு அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் அளித்த பேட்டியில், ’ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் முதல்வர் ஜெயலலிதா தனக்கான உணவை தானே உட்கொள்வதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர் ஓய்வெடுத்து வருவதாகவும்’ கூறியுள்ளார்.
 
இதனையடுத்து, ஜெயலலிதா உடல்நிலை குறித்தான முழு மருத்துவ அறிக்கை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்ததும் வெளியிடலாம் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.