வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (16:16 IST)

'ஜெயலலிதா இனியும் தமிழக மக்களிடம் நடிக்க வேண்டாம்’ - இப்படிக்கு விஜயகாந்த்

மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இனியும் தமிழக மக்களிடம் நடிக்காமல், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளதென்றும், போர்க்கால அடிப்படையில் அவைகள் சீரமைக்கப்படவேண்டும் என்றும், நடைபெறுகின்ற சில சாலைப்பணிகளும் மிகவும் மந்தகதியில் நடைபெறுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள். பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சாலைகளின் அவலங்களை தோலுரித்துக் காட்டின.
 
இதைக்கண்ட அதிமுக அரசு “தூங்கியவன் விழித்தெழுந்ததுபோல்” கடந்த 18-12-2015 அன்று ஒரு புள்ளிவிவரச் செய்தியை வெளியிட்டது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 2,626 கிலோ மீட்டர் சாலைகளும், 143 பாலங்களும், 119 மண்சரிவு இடங்களும் சீரமைப்பதற்காக 150 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 31ஆம் தேதிக்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுமென்றும் கூறியது.
 
ஆனால் இன்றைய தேதி வரையிலும் சென்னையிலுள்ள கோயம்பேடு TO கிண்டி, கோட்டை TO மதுரவாயல், கிண்டி TO கோட்டை வரையிலும் உள்ள மிக முக்கிய நெடுஞ்சாலைகள் கூட இதுவரையிலும் முழுமையாக சீரமைக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னை மாநகரின் பிற சாலைகளின் நிலைகுறித்து சொல்லவே தேவையில்லை.
 
அதிமுக ஆட்சியில். எவ்வித திட்டமிடலும், முன்னேற்பாடுகளும் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் அனைத்துமே, இப்படித்தான் இருக்கும் என்பதற்கு இந்த சாலைப்பணிகளே உதாரணமாகும். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதாலேயே, செய்யமுடியாத பணிகளை எல்லாம் செய்வது போன்ற ஏமாற்று வித்தைகளை, தமிழகத்தில் “அள்ளித்தெளித்த அவசர கோலத்தில்” அதிமுக அரசு செய்து வருகிறது.
 
தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு கிலோமீட்டர் சாலை அமைப்பதற்கு சுமார் 70 முதல் 90 லட்ச ரூபாய் வரை செலவிடப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் 150 கோடி ரூபாயை கொண்டு, மேற்கண்ட அனைத்து பணிகளையும் செய்வதென்பது சாத்தியமா? 
 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள சேதமான பழைய சாலைகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு, தரமான புதிய சாலைகள் போடப்பட்டால்தான் நிரந்தரமாக நீண்டகாலம் அச்சாலைகள் பயன்தரும். ஆனால் அதிமுக அரசு ஏற்கனவே சேதமடைந்துள்ள சாலைகள் மீது தரமற்ற தார் கொண்டும், தரமில்லா ஜல்லிக்கற்களை கொண்டும் பூசி மெழுகும் ஒட்டுவேலையை மட்டுமே செய்து வருகிறது.
 
தற்போது போடப்படும் சாலைகள் மூன்று மாதங்கள் தாக்குப்பிடிப்பதென்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதுபோன்று மோசமாக செய்யப்படும் சாலை சீரமைப்பு பணிகள், ஆட்சியாளர்களால் தமிழக மக்களுக்கு செய்யப்படும் மாபெரும் துரோகமாகும்.
 
இதையெல்லாம் பார்க்கும்போது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் கொண்டுவந்த நிவாரணப் பொருட்களை பறித்து, ஸ்டிக்கரை ஒட்டி அதிமுகவினர் வழங்கியது போல், இந்த சாலைப்பணிகளும் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விழாவில் மணமக்கள் அனைவரின் நெற்றியிலும் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். அதனால்தான் அதிமுக அரசை ஸ்டிக்கர் அரசாங்கமென மக்கள் சொல்கிறார்கள். 
 
மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இப்பணிகள் செய்யப்பட்டாலும், அதுவும் மக்களின் வரிப்பணம்தான் என்பதை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும், அதிமுக அரசும் மறந்துவிட கூடாது. மக்களின் வரிப்பணத்தை எந்த வகையில் வீணடித்தாலும் அதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதுபோன்ற புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு, தமிழக மக்களை ஏமாற்றி, மீண்டும் ஆட்சியிலே அமரலாம் என்ற நோக்கத்தில்தான் இதுபோன்ற நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.
 
“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா”, என்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பாடலில் வருகின்ற “விதவிதமான பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா” என்ற வைரவரிகள் இந்த அரசுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இத்தகைய ஏமாற்று வித்தைகளைக் கண்டு தமிழக மக்கள் இனியும் ஏமாற தயாராக இல்லை.
 
ஐந்தாண்டு காலம் எதைப்பற்றியும் கவலைப்படாமல், மக்களைப்பற்றி சிந்திக்காமல், தமிழகத்தின் வளர்ச்சியை பற்றி கருத்தில் கொள்ளாமல், மக்கள் விரோத ஆட்சி நடத்தும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இனியும் தமிழக மக்களிடம் நடிக்காமல், மக்களின் வரிப்பணத்தை வீணடிக்காமல் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.