வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (16:59 IST)

சிறுவனை மது குடிக்க வைக்கும் மற்றொரு வாட்ஸ்அப் வீடியோவால் மீண்டும் பரபரப்பு

திருவண்ணாமலையைப் போன்று மற்றொரு குழந்தைக்கு மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி ’வாட்ஸ்அப்’பில் பரவி வருகிறது.
 

 
திருவண்ணாமலை அருகே  4 வயது சிறுவனை மது குடிக்க வைத்து வேடிக்கை பார்த்த கொடுமையான காட்சிகள் சமீபத்தில் ‘வாட்ஸ்அப்’பில் பரவியது. அதில் 4 வயது சிறுவனை உட்கார வைத்து 5 நபர்கள் சுற்றி அமர்ந்து கொண்டு பிளாஸ்டிக் டம்ளரில் மது குடிக்க வைத்து ரசிக்கும் காட்சி அனைவரையும் கொதிப்படைய வைத்தது. சிறுவன் மது குடிப்பதை அவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தும் காட்சியும் இடம்பெற்று இருந்தது.
 
இது எங்கோ ஒரு மாநிலத்தில் நடந்திருக்கும் என நினைத்துக்கொண்டு இருந்தபோது அந்த இடத்தின் அருகே ‘டி.என்.25 ஏ.ஜெ.8209’ என்ற எண்ணுள்ள மோட்டார் சைக்கிள் நின்றது. இது திருவண்ணாமலை பதிவு எண் கொண்டதாகும். இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளியானது. இதைப் பார்த்த பொதுமக்கள் சிறுவனை குடிக்க வைத்த கொடுங்குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
 
அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின் பேரில் குறிப்பிட்ட மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது இந்த சம்பவம் நடந்தது திருவண்ணாமலையை அடுத்த கலசபாக்கம் அருகே உள்ள மேல்சோழங்குப்பம் என்பதை போலீசார் கண்டறிந்தனர். உடனடியாக இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் இதேபோன்று மற்றொரு குழந்தைக்கு மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்த வீடியோ காட்சி ’வாட்ஸ்அப்’பில் பரவி வருகிறது. வீடியோ காட்சியானது சுமார் 2 நிமிடம் 15 விநாடிகள் வரை ஓடுகிறது. காட்சியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவனுக்கு அவனது தந்தை சம்மதத்துடன் மது குடிக்க கற்றுக் கொடுப்பது போன்று அமைந்துள்ளது. விடியோவில் சிறுவனை மது குடிக்க வைத்து அருகில் இருப்பவர்கள் பேசும் வட்டார மொழி தென் மாவட்டத்தை சேர்ந்தவர்களின் பேச்சு வழக்குப் போல உள்ளது கூறப்படுகிறது. எனவே தென்மாவட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.