1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2017 (14:34 IST)

ஜல்லிக்கட்டுக்கு அவசரசட்டம் பிறப்பிக்காவிட்டால்...?: அன்புமணி எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு அவசரசட்டம் பிறப்பிக்காவிட்டால் வரும் 26ம் தேதி தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 

 


தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எது நடக்க வேண்டும் என்று நினைத்தோமோ, அது இப்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆட்சியாளர்களின் செயல்படாத தன்மைக்கு எதிராக இளைஞர்களும், மாணவர்களும் லட்சக்கணக்கில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னெழுச்சியாக குவிந்து மாணவர்களும், இளைஞர்களும் நடத்தி வரும் போராட்டம் வெல்ல வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த 5000 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை, இந்திய நலனுக்கு எதிராக செயல்படும் பீட்டா என்ற அமைப்பு முன்வைத்த வாதங்களின் அடிப்படையில் தடை செய்ததையோ, அந்த தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காததையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறிவந்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் நம்பிக்கை துரோகம் செய்ததைக் கண்டித்து தான், தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 1965-ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு கடந்த 50 ஆண்டுகளில் இப்படி ஒரு தன்னெழுச்சியான போராட்டத்தை போராட்டத்தை இப்போது தான் காண முடிகிறது. போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் பெருமளவில் கலந்து கொண்டிருப்பது தமிழர்களின் போராட்ட குணத்தைக் காட்டுகிறது., சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர் சக்தி வெகுண்டு எழுந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மக்கள் பிரச்சினைக்காக மாணவர்கள் போராட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் விருப்பம். இதைத் தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவும், நானும் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். பா.ம.க. எதிர்பார்த்த மாற்றம் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான மற்ற விஷயங்கள் இனி தானாக நடக்கும்.

மாணவர்களின் தன்னெழுச்சியான இப்போராட்டத்தை மதித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும். அடுத்த இரு நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்க மறுத்தால் வரும் 26 -ஆம் தேதி குடியரசு நாள் அன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகிய போட்டிகள் தடையை மீறி அமைதியாக நடத்தப்படும். இப்போட்டிகளில் மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.