ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (13:29 IST)

கடும் வெயில் எதிரொலி: 1-9ஆம் வகுப்பு தேர்வுகளை விரைந்து நடத்த அன்புமணி வேண்டுகோள்

Anbumani
தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை வெப்பம் தொடங்கியுள்ளதை அடுத்து ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான தேர்வுகளை முன்கூட்டியே நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழகத்தில் பெரும்பான்மையான நகரங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிவிட்ட நிலையிலும், ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. தேர்வுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெயிலில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் குழந்தைகள் வாடுகின்றனர்.
 
ஏப்ரல் 15 ஆம் நாளுக்குப் பிறகு தான் அவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் கடைசி வாரத்தில் தான் அவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாக இருக்குமானால், இதைவிட கொடுமையான மனித உரிமை மீறல் இருக்க முடியாது.
 
11, 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கு வரும் 6 ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. உயர் வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்க நிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்?
 
ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
 
 
Edited by Mahendran