வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:41 IST)

தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பாமக ஆதரவளிக்கும் - அன்புமணி ராமதாஸ்

தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இந்தியாவில் இப்போது நடைமுறையில் உள்ள 1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகன சட்டத்திற்கு மாற்றாக சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்ட முன்வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளில் சாலை விபத்தில் உயிரிழப்பு இல்லாத நாடாக மாற்றவே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
 
மத்திய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டத்தின் படி, போக்குவரத்துத்துறையில் மாநில அரசுகளுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் பறிக்கப்படும். வாகனங்களுக்கு வரி நிர்ணயித்தல், வரி வசூலித்தல், பதிவு செய்தல், பெர்மிட் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து தொடர்பான அனைத்து அதிகாரங்களும் தேசிய போக்குவரத்து ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்கி அதனிடம் ஒப்படைக்கப்படும். இந்த பணிகளை ஆணையம் நேரடியாக மேற்கொள்ளாது. மாறாக இப்பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும்.
 
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பேருந்து பயணம் எட்டாக்கனியாகி விடும். புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததும் இப்போதுள்ள ஓட்டுனர் உரிமங்கள் அனைத்தும் செல்லாதாகி விடும். அவற்றுக்கு மாற்றாக அடுத்த 2 ஆண்டுகளில் புதிய உரிமங்களைப் பெற வேண்டும். இந்த உரிமங்களை தனியார் நிறுவனங்கள் தேர்வு நடத்தி வழங்கும். இதற்காக அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
 
நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் அனைத்தையும் தனது அதிகார வரம்புக்குள் கொண்டு வர நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்று வருகிறது. இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால் பல லட்சம் பேர் வேலையிழப்பர்.
 
மாநில அரசுகள் மட்டுமின்றி மக்களின் உரிமைகளையும் பறித்து தனியாருக்கு தாரை வார்க்கும் இந்த கருப்புச் சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இம்மாதம் 30 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்திற்கு பாமக ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.