திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (12:00 IST)

கனியாமூர் கலவரத்தின் பின்னால் பெரிய சதி..! – அன்புமணி ராமதாஸ் சந்தேகம்!

Anbumani
கனியாமூர் பள்ளியில் நேற்று நடந்த வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் கலவரம் குறித்து அன்புமணி ராமதாஸ் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக மாணவியின் பெற்றோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இதற்கிடையே நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பள்ளி பேருந்துகள் எரிக்கப்பட்டதுடன், பள்ளியும் சூறையாடப்பட்டது.

இந்த கலவரம் திடீரென ஏற்பட்டது இல்லை என்றும், முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கலவரக்காரர்களுக்கும், தங்களும் எந்த தொடர்பும் இல்லை என மாணவியின் பெற்றோரும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவம் குறித்து பேசியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் “கனியாமூர் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்ளூர்காரர்களோ, மாணவியின் உறவினர்களோ இல்லை. தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சக்திகளும், அரசியல் காரணங்களும் கூட பின்னணியில் இருக்கலாம்” என சந்தேகம் தெரிவித்துள்ளார். இந்த வன்முறை சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு காவல் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.