செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (13:35 IST)

அரைகுறையா செய்யாதீங்க! முழுசா மூடுங்க! – அன்புமணி கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் அதை அமல்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. நேற்று இரவு 9 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கை காலை 5 மணி வரை நீடித்தது. டெல்லி, மேற்கு வங்கம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் மார்ச் 31 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில் வெறும் ஒருநாள் மட்டும் ஊரடங்கு பிறப்பிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று பலர் தமிழகத்திலும் மார்ச் 31 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதே கருத்தை வலியுறுத்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள எம்.பி அன்புமணி ராமதாஸ் ” நோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், அதன்பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். கொரோனாவை தடுக்க இன்றைய தேவை ஊரடங்கு தான்.” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பல இடங்களிலும் நிறுத்தப்பட்டுவிட்டன. இந்நிலையில் ஊரடங்கு அறிவிப்பதே வைரஸை கட்டுப்படுத்த சிறந்த வழி என மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.