1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (07:35 IST)

மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
உள்ளாட்சி இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
 
“உள்ளாட்சி இடைத் தேர்தலை திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில் ஆளும் அதிமுகவை எதிர்த்து நாங்கள் களமிறங்கினோம். ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து நேர்மையான முறையில் தேர்தலை எதிர்கொண்டோம்.
 
வேட்பாளர்கள் அறிவித்தது முதல் அதிகார துஷ்பிரயோகம், பண பலம், அராஜகம், மிரட்டல் அனைத்தையும் எதிர்கொண்டு தைரியத்துடன் நின்றோம்.
 
போர்க்களத்தில் நின்ற உணர்வை ஒவ்வொரு பாஜக தொண்டருக்கும் இந்தத் தேர்தல் கொடுத்துள்ளது. வீதிக்கு வீதி அமைச்சர்கள் முகாமிட்டிருந்தபோதிலும் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளாமல் தேர்தலைச் சந்தித்த பாஜக தொண்டர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
திணிக்கப்பட்ட இந்த இடைத் தேர்தல் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகின.
 
ஆனாலும் கோவை மேயர் தேர்தலில் பாஜக 1,28,761 வாக்குகளையும், தூத்துக்குடி மேயர் தேர்தலில்  31,708 வாக்குகளும் பெற்றுள்ளது. ராமநாதபுரம், ஒசூரில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளோம்.
 
தமிழகத்தில் ஒரு மாற்றுச் சக்தியாக பாஜக உருவெடுத்துள்ளதை இந்த முடிவுகள் காட்டுகின்றன“ என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.