இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே சீருடை, புத்தகங்கள் வழங்க ஏற்பாடு
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ–மாணவிகள் அனைவருக்கும் இன்றைய முதல் தினமே இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் மற்றும் சீருடைகள் தயார் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தம் 4 கோடியே 30 லட்சம் விலை இல்லா பாடப்புத்தகங்கள் இன்றைய தினமே 1–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகளுக்கு விடப்பட்டிருந்த கோடை விடுமுறை முடிவடைந்துள்ளதால் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்றிருந்த பொதுமக்கள் கடந்த இரண்டு நாட்களாக சென்னைக்கு திரும்பியவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், எழும்பூர் மற்றும் சென்டிரல் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.