முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது அனைத்து கட்சி கூட்டம்.! காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை.!!
காவிரி விவகாரம் தொடர்பான சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் காணொளி காட்சி வாயிலாக கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழகத்திற்கு ஜூலை 12 ஆம் தேதி முதல் வரும் 31ஆம் தேதி வரை நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து தமிழகத்திற்கு காவிரியில் இருந்து நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் கடந்த 14 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால், தமிழ்நாட்டிற்கு நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரைத் திறக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
கர்நாடகா முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறும் என முதல்வர் அறிவித்திருந்தார். இருப்பினும் அனைத்து கட்சி கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது நடைபெற்று வரும் அனைத்து சட்டமன்ற கட்சித் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றுள்ளார். அவரது தலைமையில் நடைபெற்ற வரும் இந்த கூட்டத்தில், காவிரி விவகாரத்தில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. காவிரி நீரை திறக்காத கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.