1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (14:39 IST)

எல்லா குமாரசாமியும் தப்பு செய்ய மாட்டார்கள்; தண்டனை உறுதி - ஜெ.வை தாக்கும் லியோனி

ஒரு குமாரசாமி தப்பு செய்யலாம், அதற்காக எல்லா குமாரசாமியும் தப்பு செய்வார்கள் என்று சொல்லமுடியாது என்றும் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைப்பது உறுதி என்றும் திமுக மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறியுள்ளார்.
 

 
தூத்துக்குடியில்  கலைஞரின் 93வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய லியோனி, "சட்டசபை என்பது முதல்வரின் புகழ்பாடும் மன்றமாகவே இருந்து வருகிறது, அம்மா உப்பு, அம்மா உணவகம் என்ற ரீதியில் அம்மாவை புகழ்ந்து பஜனை பாடும் மன்றமாகவே இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.
 
இதற்கு பதிலாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சொன்னதுபோன்று சட்டசபை கூட்டத்தை இனிமேல் போயஸ் கார்டன் இல்லத்து சமையலறையிலேயே நடத்தி விடலாம்.
 
பாராளுமன்றத்தில் தனது கட்சி தலைவரை பற்றி புகார் சொன்னதால் இதுவரை நல்லவராக இருந்த அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா இப்போது அதிமுகவினருக்கு கெட்டவராகி விட்டார். இதனால் அவர் மீது வேண்டுமென்றே பொய் வழக்குகள் காவல்துறையால் போடப்பட்டு வருகிறது.
 
அதிமுகவில் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு அமைச்சரும் அமாவாசை வந்தால் நமது பதவி இருக்குமா? அல்லது பறிபோய் விடுமா? என்ற பயத்திலேயே வாழ்கின்றனர்.
 
தப்பு செய்தவர்கள் தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்பவே முடியாது, ஒரு குமாரசாமி தப்பு செய்யலாம், அதற்காக எல்லா குமாரசாமியும் தப்பு செய்வார்கள் என்று சொல்லமுடியாது. தமிழக முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைப்பது உறுதி" என்று கூறியுள்ளார்.