1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:25 IST)

எங்கெங்கும் அதிமுக - உள்ளாட்சி இடைத்தேர்தலில் அமோக வெற்றி

கோவை, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தல் உள்பட பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றி வாகை சூடியுள்ளது.


 
மொத்தம் காலியாக இருந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நெல்லை மேயர், 4 நகரசபை தலைவர் பதவி உள்பட 1500–க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு அ.தி.மு.க.வினர் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வாகி விட்டனர். மீதமுள்ள 530 இடங்களிலும் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் போட்டியிடவில்லை. அ.தி.மு.க.வை எதிர்த்து, பா.ஜ.க. மட்டுமே களத்தில் இருந்தது. ஊரகப் பகுதிகளில் 67.99 சதவீதமும், நகர்ப்புறப் பகுதிகளில் 63.57 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு-
 
தூத்துக்குடி மாநகராட்சி
 
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் அந்தோணி கிரேசி, பா.ஜனதா சார்பில் ஜெயலட்சுமி உள்பட 7 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் அந்தோணி கிரேசி 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
 
கோவை மாநகராட்சி 
 
கோவை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜ்குமார், பாரதீய ஜனதா வேட்பாளராக நந்தகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக பத்மனாபன் உள்பட 16 பேர் போட்டியிட்டனர். 4ஆவது சுற்று முடிவில் அ.தி.மு.க. வேட்பாளர் 75 ஆயிரம் வாக்குகள் முன்னணியில் உள்ளார்.
 
கடலூர் நகராட்சி
 
கடலூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் குமரன் 65 ஆயிரத்து 550 வாக்குகளும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளர் 6 ஆயிரத்து 239 வாக்குகளும், பாரதீய ஜனதா வேட்பாளர் 4 ஆயிரத்து 954 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் குமரன் 57 ஆயிரத்து 311 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
விருத்தாசலம் நகராட்சி
 
விருத்தாசலம் நகராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் அருளழகனுக்கு 29 ஆயிரத்து 148 வாக்குகளும், பாரதீய ஜனதா வேட்பாளர் சரவணனுக்கு 3 ஆயிரத்து 651 வாக்குகளும் கிடைத்திருந்தன. இதன்மூலம் அ.தி.மு.க. வேட்பாளர் அருளழகன் 25 ஆயிரத்து 497 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
 
ராமநாதபுரம் நகராட்சி
 
ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்தானலட்சுமி 13 ஆயிரத்து 169 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பா.ஜனதா வேட்பாளர் துரைக்கண்ணன் 7 ஆயிரத்து 385 வாக்குகள் பெற்று தனது டெபாசிட்டைத் தக்க வைத்துக்கொண்டார்.
 
அரக்கோணம் நகராட்சி
 
அரக்கோணம் நகராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கண்ணதாசன் 11,832 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக சுயேச்சை வேட்பாளர் ஈஸ்வரன் 2000 வாக்குகள் பெற்றுள்ளார்.

திருச்சி 15 & 32 ஆவது வார்டுகள்
 
திருச்சி மாநகராட்சியில் 15 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி 6,807 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதே போல, 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஆர். சங்கர் 1,640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
திருப்பூர் 22ஆவது வார்டு
 
திருப்பூர் மாநகராட்சியின் 22ஆவது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த கலைமகள் கோபால்சாமி, 3882 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிபிஎம் வேலுச்சாமி 2049 வாக்குகள் பெற்றார். 45ஆவது வார்டில் அதிமுகவைச் சேர்ந்த  எம்.கண்ணப்பன் 4292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜகவின் சிவக்குமார் 1810 வாக்குகள் பெற்றார்.
 
சென்னை 35ஆவது வார்டு
 
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 35ஆவது வார்டு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் 19,676 வாக்குகளும், பாஜக வேட்பாளர் 1,522 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
 
மதுரை 4ஆவது வார்டு
 
மதுரை மாநகராட்சி 4ஆவது வார்டு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சண்முகம் 4,900 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
 
ஓமலூர் டவுன் பஞ்சாயத்து
 
சேலம் மாவட்டம் ஓமலூர் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சிவகுமார் 6313 வாக்குகள் பெற்றார். பாஜகவின் மணிகண்டன் 1083 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் 5230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
 
மாற்று சக்தி: தமிழிசை சவுந்தரராஜன் 
 
தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகம், பணபலம், அராஜகம், மிரட்டல் அத்தனையையும் எதிர்த்து, களத்தில் தைரியமாக நின்றோம். உள்ளாட்சி இடைத்தேர்தலில் 3இல் ஒரு பங்கு வாக்குகளை பாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ளது. ஓசூர், ராமநாதபுரத்தில் டெபாசிட்டைத் தக்க வைத்துள்ளோம். சில வார்டுகளைக் கைப்பற்றி இருக்கிறோம். இந்தத் தேர்தல், எங்களுக்குச் சக்தியைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியாக பாரதீய ஜனதா உருவெடுத்து வருவதை நிரூபித்துள்ளோம் என்று தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.