1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 21 ஜூன் 2024 (11:48 IST)

சபாநாயகரின் அழைப்பை புறக்கணித்த அதிமுக..! சற்று நேரத்தில் ஆளுநரை சந்திக்க திட்டம்..!!

Admk MLAs
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க சட்டசபைக்கு வரவேண்டும் என்ற சபாநாயகரின் கோரிக்கையை புறக்கணித்த அதிமுகவினர், இன்னும் சற்று நேரத்தில் தமிழக ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம்  தமிழகத்தையே உலுக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது.   எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர்.
 
தொடர்ந்து கூட்டத்தொடர் தொடங்கியதும் விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்தை ஒத்திவைக்கக் கோரி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறினார். ஆனால் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதனால் அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி சென்று வெளியேற்றினர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 
இதனிடையே கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து விவாதிக்க மீண்டும் சட்டசபைக்கு வர வேண்டுமென சபாநாயகர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் தெரிவிக்க ஆளுநரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.