1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 6 மே 2016 (17:56 IST)

அதிமுக தேர்தல் அறிக்கை ஒரு மயக்க பிஸ்கெட் - கி.வீரமணி

மக்களின் கைகளில் இருக்கும் வாக்குகளைப் பறிப்பதற்கான மயக்க பிஸ்கெட்டே இந்தத் தேர்தல் அறிக்கை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து கூறியுள்ள வீரமணி, ”வழக்கமாக அ.தி.மு.க. இதற்கு முந்தைய பல ஆண்டுகள் முதலில் தேர்தல் அறிக்கை கொடுப்பவர்கள் அவர்கள்தான். அப்படிப்பட்ட ஒரு கட்சி, இன்னும் 10 நாள்கள்கூட இல்லாத நிலையில், தேர்தல் வரவிருக்கின்ற நிலையில், கடைசியாக தேர்தல் அறிக்கை கொடுத்த ஒரு கட்சி என்ற பெருமையுடன் இந்தத் தேர்தல் அறிக்கையைக் கொடுத்திருக்கிறது.
 
இதில் பல அறிவிப்புகள், ஏற்கெனவே பல தேர்தல் அறிக்கைகளில், குறிப்பாக அதனுடைய முக்கிய போட்டியாளராக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையினை மய்யப்படுத்தியே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது நேற்று அந்த தேர்தல் அறிக்கையை முழுமையாகப் படித்ததிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
 
அதோடு, அண்மையில் இதற்கு முன்பாக சட்டப்படி ஒரு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பின்படி, தேர்தலுக்கு முன்பாக தேர்தலில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகள் கொடுத்தால், இலவசங்களை அதில் அறிவித்தால், அந்த இலவசங்களை அவர்கள் கொடுப்பதற்குரிய வாய்ப்பை, தங்களுடைய வரவு - செலவு திட்டத்தில், தங்களுடைய நிதிநிலை அறிக்கையில் - தங்களுடைய நிதி மேலாண்மையில் எப்படி அதனை கொடுப்பார்கள் என்ற விவரத்தை விளக்கவேண்டும் என்று மிகத் தெளிவாக அந்தத் தீர்ப்பில் இருக்கிறது.
 
அப்படி விளக்கியிருந்தால்தான், அந்தத் தேர்தல் அறிக்கையேகூட செல்லுபடியாகும். இல்லையெனில், இந்தக் கட்சியையே கூட அவர்கள் தகுதிக் குறைவாக ஆக்கக்கூட அளவிற்குக்கூட அதனுடைய சட்ட வலிமை உண்டு.
 
அது ஒருபுறம் இருந்தாலும்கூட, நிச்சயமாக தங்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை அதிமுக உணர்ந்திருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் அறிக்கைதான் ஒரு சான்று.
 
ஏனென்றால், இதுவரைக்கும் காத்திருந்து, மற்றவர்கள் யாரும் இலவசங்களை அறிவிக்க முன்வராத ஒரு நல்ல சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ள நேரத்தில், தங்களுடைய தேர்தல் அறிக்கையில் செல்போன் கொடுப்போம், அதைக் கொடுப்போம், இதைக் கொடுப்போம் என்று சொல்கிறார்கள்; ஏற்கெனவே மின்சார வாரியம் கடனில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
 
இதிலே 100 யூனிட் ஒரு குடும்பத்திற்கு இலவசம் என்று சொன்னால், பல குடும்பங்கள் 100 யூனிட்டாகவே ஆகிவிடுவார்கள். கூட்டுக் குடும்பங்கள் எல்லாம், தனித்தனி குடும்பமாகக் கணக்குக் காட்டிவிடுவார்கள். அதையெல்லாம் மின்சார வாரியம் எப்படி தாங்கப் போகிறது? மின்சார வாரியத்தையே தாங்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கின்ற அரசாங்கம் எப்படி தாங்கப் போகிறது என்பதெல்லாம் பொருளாதார நிபுணர்கள் சிந்திக்கவேண்டிய ஒரு செய்தி.
 
அவர்கள் தாராளமாக அறிவித்திருப்பதற்கு என்ன காரணம் என்றால், தாங்கள் பதவிக்கு வரப்போவதில்லை. ஆகவே, சொல்லும்பொழுது தாராளமாகச் சொல்லிவிடலாம்.

இதில் மக்கள் ஏமாறவேண்டும் என்று மயக்க பிஸ்கட்டுகளைத்தான் கொடுத்திருக்கிறார்கள். மயக்க பிஸ்கெட்டுகள் சாப்பிடும்பொழுது நன்றாக இருக்கும். பிறகுதான் அதனுடைய விளைவு தெரியும். மக்களின் கைகளில் இருக்கும் வாக்குகளைப் பறிப்பதற்கான மயக்க பிஸ்கெட்டே இந்தத் தேர்தல் அறிக்கை” என்று கூறியுள்ளார்.