ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By papiksha joseph
Last Modified: புதன், 31 மே 2023 (15:10 IST)

அதிமுக மாநாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் - செல்லூர் ராஜு!

கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் அளவிற்கு அதிமுக மாநாடு நடத்தப்படும் எனவும், மாநாட்டில் 60 இலட்சம் அதிமுக தொண்டர்கள் கலந்து உள்ளனர் எனவும் மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார். 
 
மதுரை மாவட்டம் வளையங்குளம் அருகே ஆகஸ்ட் 20 ஆம் தேதி வலையங்குளம் கருப்பசாமி கோவில் மைதானத்தில் அதிமுக மாநாடு நடத்த அனுமதி கேட்டும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்திடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் , தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள்  மனு அளித்தனர்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் "அதிமுகவை எடப்பாடி கே.பழனிச்சாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழ்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநாடு மதுரையில் நடைபெறுகிறது, மதுரையில் வளையங்குளம் அருகே மிகப்பெரிய அளவில் மாநில மாநாடு நடைபெறுகிறது, மாநாடு நடத்த அனுமதிக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட எஸ்.பி யிடம் மனு அளிக்கப்பட்டது.
 
இந்தியாவில் இதுவரை நடக்காத அளவிற்கு மாநாடு நடத்தப்படும், கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும் மாநாடாக அதிமுக மாநாடு அமையும், இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மாநாடு அமையும், மாற்று கட்சியினர் பாராட்டும் வகையில் மாநாடு நடத்தப்படும், மதுரையில் நடைபெறும் மாநாட்டில் 50 லிருந்து 60 இலட்சம் அதிமுக தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்" என கூறினார்.