ஜெயலலிதாவுக்கு கும்பிடு; மக்களுக்கு முதுகு - தா.பாண்டியன் குற்றச்சாட்டு
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது, அவர்கள் ஜெயலலிதா பக்கம் திரும்பிக் கும்பிடு போடுகிறார்கள். மக்களுக்கு முதுகைத்தான் காண்பிக்கிறார்கள் என்று சிபிஐ தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
நாகையில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, பேசிய தா.பாண்டியன், “நாம் எல்லோரும் சேர்ந்துதான் இதுவரை திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினோம். ஆறுகள், குளங்களைக் காணோம். இனியும் நாம் அவர்களுக்கு ஓட்டுப் போட்டால், தமிழ்நாடே காணாமல் போய்விடும்.
இந்த இரு கட்சிகளும் மே-19 அன்று, தேர்தல் தீர்ப்புகளை மட்டும் எதிர்பார்க்கவில்லை. அடுத்து, நீதிமன்றத் தீர்ப்புகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலவசங்களைக் கொடுத்தும் அப்பாவி மக்களுக்குப் பணம் கொடுத்தும் எப்படியாவது ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் இனி அது நடக்காது.
6 கட்சிக் கூட்டணியை ஆட்சியில் அமர்த்துங்கள். நாம் கையேந்தாத தமிழர்களை உருவாக்குவோம். டி.வி.விளம்பரங்களுக்காக திமுக, அதிமுக கட்சிகள் ரூ.50 கோடிக்கு மேல் செலவிடுகின்றன. மாம்பழ சீசன் என்று விளம்பரம் செய்யும் பாமகவும் ரூ.40 கோடி என்று செலவு செய்கிறது. இவர்களுக்கு எப்படிப் பணம் வருகிறது?
தலித் இளைஞர்கள் பிற சாதிப் பெண்களைக் காதலித்து மணந்தால், அந்த இளைஞர்களை ஆணவக் கொலை செய்து விடுகிறீர்கள். தருமபுரியில் தலித் ஊர்கள் பற்றி எரிந்ததை இன்னும் நாங்கள் மறக்கவில்லை. நாகையில் தாமரைக் குளம் ஏன் மூடிக் கிடக்கிறது என்று நான் வரும்போது தோழர்களிடம் கேட்டேன்.
குளம் புனரமைப்பு என்னும் பெயரில் கோடிக் கோடியாக ஊழல் செய்து விட்டார்கள் என்று சொன்னார்கள். தாமரைக் குளத்தினால் சில பேர் கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். இதுதான் இப்போது தமிழ்நாட்டின் நிலையும். கொள்ளையடிக்கவே இவர்கள் திட்டம் போடுகிறார்கள்.
ஜெயலலிதா, ஏ.சி.மேடையில் இருக்க, கீழே கொத்தடிமைகளாக வேட்பாளர்கள் நின்றிருக்க, அவர் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திப் பெயர்களைச் சொல்லும்போது, அவர்கள் ஜெயலலிதா பக்கம் திரும்பிக் கும்பிடு போடுகிறார்கள். மக்களுக்கு முதுகைத்தான் காண்பிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.