செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:09 IST)

நான் நினைத்திருந்தால் ஜெ. இறந்தவுடனே முதல்வர் ஆகியிருப்பேன்: சசிகலா

ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன் கட்சியை உடைக்கும் வேலை நடந்தது. ஓ.பி.எஸ் என்னை முதல் அமைச்சர் ஆகுமாறு வற்புறுத்தினார். ஆனால், எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டேன். நான் நினைத்திருந்தால் அப்போதே முதல்வர் ஆகியிருப்பேன். 


 

 
இன்று போயஸ் கார்டனில், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: 
 
ஜெயலலிதா மரணம் அடைந்தவுடனேயே, கட்சியை உடைக்கும் வேலை நடந்தது. எனவே, ஓ.பி.எஸ்-ஐ முதல்வராக வேண்டும் என வற்புறுத்தினேன். ஆனால், என்னை முதல் அமைச்சர் ஆகுமாறு ஓபிஎஸ் வற்புறுத்தினார். ஆனால், எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டேன். நான் நினைத்திருந்தால், அப்போதே முதல்வர் ஆகியிருப்பேன்.
 
பெரியகுளத்தில் சாதரணமாக இருந்த ஓ.பி.எஸ்-ஐ முதல்வர் ஆக்கினார் ஜெ. ஆனால், அவர் துரோகம் செய்துள்ளார்.
 
எம்.ஜி.ஆர் மறைந்த போது, ஜானகியின் உறவினர்கள், சசிகலாவை தாக்கினார்கள். அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். அதன் பின் எனக்கு அரசியலே வேண்டாம் என அவர் கூறினார். ஆனால், ‘உங்களை இழிவு படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்’ என அவருக்கு எடுத்து சொல்லி, அரசியலில் ஈடுபட வைத்தேன். அதன்பின் அதிமுக இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
 
ஆனால், சட்டசபையில் ஓ.பி.எஸ்-யின் நடவடிக்கை எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உங்களுக்கே எங்கள் ஆதரவு, நாங்கள் இருக்கிறோம் என ஓ.பி.எஸ்-யிடம் துரை முருகன் கூறினார். ஆனால், அதற்கு ஓ.பிஎஸ் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. உங்கள் ஆதரவு தேவையில்லை என அவர் கூறியிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
 
எனவே, இதற்கு மேல் விட்டால் சரிவராது என இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலைக்கு தள்ளியவர் ஓ.பி.எஸ்.தான். நான் எதற்கும் பயப்படவில்லை. ஓ.பி.எஸ்-ஐ போல் ஆயிரம் பேரை நான் பார்த்துவிட்டேன். நானும், ஜெ.வும் இரு பெண்மணிகளாக சேர்ந்து இவ்வளவு தூரம் வந்துள்ளோம். எனவே, நான் சாதித்துக் காட்டுவேன், என்றார்.