1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : சனி, 11 பிப்ரவரி 2017 (21:26 IST)

கூவத்தூர் டூ ராமச்சந்திரா மருத்துவமனை கெஸ்ட் ஹவுஸ் - அதிமுக எம்.எல்.ஏக்கள் மாற்றம்?

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், ராமச்சந்திரா மருத்துவமனையில் அமைந்துள்ள கெஸ்ட் ஹவுஸிற்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது...


 

 
சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின், அதிமுக எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் சசிகலா தரப்பு ஈடுபட்டது. அதற்காக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ஹபுஸ் என்ற விடுதிக்கு, எம்.எல்.ஏக்கள் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் அங்கு இருந்தனர்.  ஆனால், இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சசிகலா தரப்பு நியமித்துள்ள பாதுகாவலர்களின் கெடுபிடிகளால், தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில், எம்.எல்.ஏக்களை சுதந்திரமாக செயல்பட விடாமல், சசிகலா தரப்பு அவர்களை அடைத்து வைத்திருப்பதாக செய்திகள் பரவியது. நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனால், விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. 
 
எனவே, மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் இன்று காலை கூவத்தூர் சென்று அங்கு சோதனை செய்தனர். மேலும், இன்று மாலை சசிகலாவும் அங்கு சென்று எம்.எல்.ஏக்களிடம் சந்தித்து பேசினார்.  
 
இந்நிலையில், அங்கிருந்த அனைத்து எம்.எல்.ஏ-க்களையும், சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசிற்கு பேருந்துகள் மூலம் சசிகலா தரப்பு மாற்றி விட்டதாகவும், மீடியா வெளிச்சம் படக்கூடாது என்பதற்காக, விளக்குகள் அணைக்கப்பட்டு எம்.எல்.ஏக்கள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.