வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 8 பிப்ரவரி 2017 (16:21 IST)

அதிமுக எம்எல்ஏக்கள் நட்சத்திர ஓட்டலில் சிறை வைப்பு?

அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்..


 

 
தன்னை கட்டாயப்படுத்தி சசிகலா தரப்பு ராஜீனாமா கடிதத்தை பெற்றுக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் பரபரப்பு பேட்டியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு முதலே, தமிழக அரசியலில் பரபரப்பான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 
 
அவரின் குற்றச்சாட்டை மறுத்த சசிகலா, ஓ.பி.எஸ்-ஐ அதிமுக பொருளாலர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். மேலும், அவரின் குற்றச்சாட்டையும் மறுத்ததோடு, அவர் திமுகவிடம் விலை போய்விட்டதாக கூறினார். 
 
எனவே, அதிமுக இரண்டாக உடைந்தது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் பக்கம் ஆதரவு தெரிவிப்பார்கள் என்பது தெரியாத ஒரு குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து. இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கலந்து கொண்டு எம்.எல்.ஏக்களிடம் பேசினார்.  
 
ஆனால், அந்த கூட்டம் முடிந்த பின்பும், எம்.எல்.ஏக்கள் யாரும் வெளியே வரவில்லை. அவர்கள் அனைவரையும் 2 பேருந்துகள் மூலம், விமானம் நிலையம் கொண்டு செல்ல இருப்பதாகவும், அங்கிருந்து டெல்லிக்கு அவர்களை அழைத்து சென்று, சசிகலாவிற்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காமல், ஆளுநர் தாமதம் செய்து வருவதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார் தெரிவிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், நாளைதான் அவர்கள் டெல்லி கொண்டு செல்லப்பட உள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
அதேபோல், ஆளுநர் வித்யாசாகர் இன்னும் சென்னை திரும்பாத சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் விலகி சென்று ஓ.பி.எஸ் பக்கம் சென்று விடக்கூடாது என்பதற்காக, தற்போது அவர்கள் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தமிழக அரசியலில் அடுத்தடுத்து  நடக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.