ஓபிஎஸ் அணியில் அமைச்சர்கள்; கழட்டிவிடப்படும் தினகரன்!

ஓபிஎஸ் அணியில் அமைச்சர்கள்; கழட்டிவிடப்படும் தினகரன்!


Caston| Last Updated: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:46 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு அணியாக பிரிந்த தற்போது ஒரே அணியாக இணையும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தமிழக அரசியலில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் நடைபெற உள்ளது.

 
 
குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுகவை ஒட்டுமொத்தமாக கபளீகரம் செய்ய களத்தில் குதித்தது சசிகலா குடும்பம். முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸை ராஜினாமா செய்ய வைத்து முதல்வர் பதவியை அடைய ஆசைப்பட்டார் சசிகலா ஆனால் அவருக்கு கிடைத்தது என்னவே சிறை தண்டனை தான்.
 
சிறைக்கு போகும் முன்னர் தனது அக்கா மகன் தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார் தினகரன். தினகரன் ஒட்டுமொத்தமாக அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றார். ஆனால் கடைசியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது தான் மிச்சம்.
 
இதனையடுத்து ஆர்கே நகர் தேர்தல் ரத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. அடுத்தடுத்து ஆட்சிக்கும் கட்சிக்கும் மக்கள் மத்தியில் அவப்பெயர் தான் உருவாகிக்கொண்டிருந்தது. இதனால் மூத்த அமைச்சர்கள் பலரும் தினகரனுக்கு எதிரான மனநிலையில் வந்தனர்.
 
தினகரன் தொடர்ந்து கட்சியில் இருந்தால் தன்னுடைய சுயநலனுக்காக கட்சியை ஒட்டுமொத்தமாக அழித்துவிடுவார் என அமைச்சர்கள் பேசிக்கொண்டனர். இதனையடுத்து தான் கடந்த வெள்ளிக்கிழமை தினகரனை சந்தித்த அமைச்சர் தங்கமணி உங்களாலும் உங்கள் குடும்பத்தாலும் கட்சி அழிவுப்பாதைக்கு செல்கிறது. எந்த செல்வாக்கும் இல்லாத நீங்கள் தொடர்ந்து இந்த பதவியில் நீடிக்க வேண்டுமா என ஒரே போடாக போட்டார்.
 
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த தினகரன் நான் பதவி விலகினால் கட்சி நன்றாக இருக்குமென்றால் அதற்கு தயார் என கூறினார். ஆனால் எந்த முடிவாக இருந்தாலும் சித்தி சசிகலாவிடம் கேட்டுவிட்டு எடுக்கிறேன். 17-ஆம் தேதி சசிகலாவை சந்தித்த பின்னர் எனது முடிவை கூறுகிறேன் என்றார் தினகரன்.
 
ஆனால் நேற்று 17-ஆம் தேதி தினகரனால் சசிகலாவை சந்திக்க முடியாமல் சென்னை திரும்பினார். இதனையடுத்து அமைச்சர்கள் அனைவரும் தினகரனுக்கு கொடுத்த நேரம் முடிந்து விட்டது நாமே முடிவெடுப்போம் என நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தி ஓபிஎஸ் அணியுடன் இணையப்போவதை உறுதிப்படுத்தினர். இதனால் தினகரன் ஒட்டுமொத்தமாக கழட்டிவிடப்படும் நிலைக்கு வந்துவிட்டார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :