1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 மே 2018 (15:31 IST)

ஸ்டெர்லைட் போராட்டமா? ; எங்களுக்கு எதுவும் தெரியாது - நழுவிய அமைச்சர்கள்

தூத்துக்குடியில் இன்று காலை நடைபெற்ற ஸ்டெர்லைட் போராட்டம் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என அதிமுக அமைச்சர்கள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடவும், கலெக்டர் அலுவலகத்தை முற்ற்றுகையிடவும் திட்டமிட்டு அப்பகுதி மக்கள் 50,000 பேர் இரண்டு குழுக்களாக பிரிந்து ஒரு குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையை நோக்கியும் இன்னொரு குழுவினர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கியும் இன்று காலை சென்றனர்.  
 
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மக்கள் போலீஸார் மீது கல் வீசியும், போலீஸ் வாகனத்தை அடித்தும் நொறுக்கினர். இதனையடுத்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இதனால் தூத்துக்குடியே கலவர பூமியாக காணப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 
 
அப்போது, போலீசாரின் வாகனங்களை பொதுமக்கள் சேதப்படுத்தினர். மேலும், சில வாகனங்களை கழித்து பொதுமக்கள் கவிழ்த்து போட்டனர். அதோடு, கற்களை கொண்டு போலீசாரை தாக்கினர். ஒரு கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து போலீசாரின் மீது கற்களை எறிந்ததால், பின் வாங்கிய போலீசார் சுவர்கள் மீது ஏறி தப்பி ஓடினர்.  போராட்டக்காரர்கள் கல்வீசு தாக்கியதில் வணிக வளாகங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. எனவே, அந்த பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியே தற்போது கலவர பூமியாக மாறியுள்ளது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
மேலும், போலீசார் அப்போது நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் இறந்துள்ளனர். 

 
இந்நிலையில், இன்று காலை டெல்லியில் அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார். அப்போது, ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு “எனக்கும் எதுவும் தெரியாது. நானும் உங்களைப் போல கேள்விப்பட்டேன். முழுமையான தகவல் தெரிந்த பின் இதுபற்றி கருத்து கூறுகிறேன்” எனக் கூறி அவர் நழுவினார். அதேபோல், சென்னையில் இன்று மாலை இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அவரும், போரட்டம் பற்றி முழுமையான தகவல் தெரியவில்லை. தெரிந்த பின் கூறுகிறேன் என்றார். ஆனாலும், பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டது தவறு என்று மட்டும் அவர் கண்டித்தார். 
 
தூத்துக்குடியில் நடந்த ஒரு பெரிய கலவரம் பற்றி தங்களுக்கு தெரியாது என முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர்கள் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.