விஜயகாந்த்தும்தான் கட்சி ஆரம்பித்தார், அவர் நிலைமை என்ன? – கூட்டணிக்கு குண்டு வைத்த அதிமுக அமைச்சர் !
விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து, இப்போது இருக்கும் நிலைதான் நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் என அதிமுக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
நடிகர்களின் அரசியல் வருகை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் சீமான் ஆகியோர் கடந்த சில நாட்களாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது நடிகர்கள் மேல் இவர்களுக்கு இருக்கும் பயத்தையே காட்டுகிறது என்று சம்மந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக வின் கதர் மற்றும் கிராமத் தொழிற்துறை அமைச்சர் பாஸ்கரன் அதிமுக கூட்டணிக்கே பங்கம் வரும் விதமாக ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் நடிகர்கள் அரசியலுக்கு வருவது ‘ விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார், அது என்ன ஆனது பார்த்தீர்களா? இனி நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால், அது செல்லுபடி ஆகாது.” எனத் தெரிவித்துள்ளார்.
தேமுதிக அதிமுகவின் கூட்டணியில் கடந்த இரண்டு தேர்தல்களாக இருந்து வரும் நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.