சென்னை புறப்பட்ட ஓபிஎஸ்; அவசர ஆலோசனயில் ஈபிஎஸ்! – அதிமுகவில் பரபரப்பு!
அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து இருவரையும் அதிமுக அமைச்சர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வர அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர் குறித்து அதிமுக தலைமை 7ம் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சொந்த ஊரான பெரிய குளத்தில் உள்ள ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மூன்று நாட்களாக ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஓ.பன்னீர்செல்வம் சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
வரும் 7ம் தேதி அதிமுக தலைமையிலிருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.