1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (00:39 IST)

அதிமுக கரூர் மாசெ.விஜயபாஸ்கர் நியமனம்: செந்தில் பாலாஜி ஆதிக்கம் முடிவு

அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டார். இதன் மூலம் முன்னநாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
 

 
கடந்த 2011ஆம் ஆண்டு போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பதவியேற்ற செந்தில் பாலாஜி தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு மேல் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். மேலும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலும் நீடித்தார்.
 
இந்த நிலையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார். முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழக போக்குவரத்துறை அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் பதவியை அமைச்சர் தங்கமணி கூடுதலாக கவனித்து வந்தார்.
 
இந்த நிலையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டது. இந்த ரேஸில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.வடிவேல், முன்னாள் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் செந்தில் நாதன், தாந்தோனி ஒன்றியச் செயலாளர் ரெயின்போ பாஸ்கர், பரமத்தி ஒன்றியச் செயலாளர் மார்கண்டேயன் மற்றும் கோயம்பள்ளி பாஸ்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் போட்டியில் குதித்தனர்.
  
போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவிதான் தனது கையைவிட்டுப் போய்விட்டது. மாவட்டச் செயலாளர் பதவியாவது தனக்கு வேண்டியவர்களுக்கு லாபி செய்து வாங்கிவிட்டால், கரூர் மாவட்டத்தை மீண்டும் தனது கன்ரோலில் வைத்துக் கொள்ளலாம், மேலும், வரும் சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ. பதவியைப் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, செந்தில் பாலாஜி காய் நகர்த்தினார். இதற்காக தனது முழு அரசியல் பலத்தையும் செயல்படுத்தினார்.
 
ஆனால், அவரது கனவை தகர்த்தும் வகையில் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளராக விஜயபாஸ்கர் நியமனம் செய்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின்  4 ஆண்டுகளுக்கு மேல் அசைக்கமுடியாத ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.