வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 28 டிசம்பர் 2016 (12:38 IST)

அதிமுக பொதுக்குழு இப்படித்தான் நடக்கப்போகிறதாம்: யாருக்கு அனுமதி? யாருக்கு அனுமதி இல்லை?

அதிமுக பொதுக்குழு இப்படித்தான் நடக்கப்போகிறதாம்: யாருக்கு அனுமதி? யாருக்கு அனுமதி இல்லை?

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அதிமுக பொதுக்குழு நாளை கூடுகிறது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் அடுத்து பொதுச்செயலாளர் யார் என்பது தீர்மானிக்கப்படும். இதனால் அரசியல் வட்டாரத்தில் இந்த பொதுக்குழு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.


 
 
சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என ஒரு தரப்பினரும் சசிகலா வேண்டாம் என இன்னொரு தரப்பினரும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். சசிகலாவுக்கு எதிர்ப்பும், பன்னீர்செல்வம், தீபாவுக்கு ஆதரவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இந்நிலையில் சசிகலா பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தால் அதிருப்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அது சசிகலாவுக்கு அவமானமாகிவிடும் என்பதால் நாளை சசிகலா பொதுக்குழு கூட்டத்திற்கு வர மாட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் சசிகலாவை தலைமையேற்க வாருமாறு தீர்மானம் நிறைவேற்றி கார்டனில் உள்ள சசிகலாவிடம் அளிப்பார்கள் அதன் பின்னர் சசிகலா பொதுக்குழுவுக்கு வந்து பொதுச்செயலாளராக பதவியேற்று சில நிமிடங்கள் பேசுவார் என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு அவர்களுக்கு பொதுக்குழுவில் பங்கேற்க அழைப்பு அனுப்பவில்லையாம். பொதுக்குழுவுக்கு வரும் கட்சியினரை ஆடம்பர ஹோட்டலில் தங்கவைத்து பொதுக்குழு நடக்கும் இடத்திற்கு சொகுசு பேருந்தில் அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.
 
பொதுக்குழு நடக்கும் இடத்தில் கட்சியினர் யாரும் செல்போன் எடுத்து வர தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஊடகத்தினர் யாருக்கும் இங்கு அனுமதி இல்லை. கட்சி தலைமையே பொதுக்குழு நடக்கும் புகைப்படத்தை அந்தந்த ஊடகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவிடுமாம்.
 
மேலும் மிகவும் முக்கியமாக பொதுக்குழு நடக்கும் இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரின் படங்களை தவிர வேறு யாருடைய படமும் இடம்பெறக்கூடாதாம். குறிப்பாக முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் படம் இடம்பெறக்கூடாதாம்.