அதிமுக கட்சியின் முதல் எம்.பி மாயத்தேவர் காலமானார்! - அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!
அதிமுக கட்சியின் முதல் எம்.பியும், முதல்முறையாக இரட்டை இலை சின்னத்தில் நின்று வென்றவருமான மாயத்தேவர் இன்று காலமானார்.
திராவிட முன்னேற்ற கட்சியில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கடந்த 1972ம் ஆண்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டப்பின் தனியாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை தொடங்கினார்.
கட்சி தொடங்கி சில நாட்களிலேயே திண்டுக்கல் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் உயிரிழந்ததால் அப்பகுதியில் எம்.பி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.
அந்த சமயம் திமுகவை வெல்ல நினைத்த அதிமுக திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளராக களமிறக்கியவர்தான் மாயத்தேவர். உசிலம்பட்டி அருகே உள்ள உச்சப்பட்டி கிராமத்தில் பிறந்த மாயத்தேவர் சட்டக் கல்லூரியில் படித்து சென்னை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தவர்.
அதிமுக வேட்பாளராக தேர்வான மாயத்தேவர்தான் சுயேட்சை சின்னங்களில் முதன்முதலில் இரட்டை இலையை தேர்ந்தெடுத்து அதை எம்.ஜி.ஆரிடமும் சிபாரிசு செய்தார். பின்னர் இரட்டை இலை சின்னத்திலேயே நின்ற மாயத்தேவர் ஆளும் திமுக கட்சியின் வேட்பாளரான பொன் முத்துராமலிங்கத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று அதிமுகவின் முதல் நாடாளுமன்ற எம்.பி ஆனார்.
பின்னர் சில காலம் கழித்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அரசியலில் இருந்து விலகினார். சமீப காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த மாயத்தேவர் இன்று உயிரிழந்துள்ளார்.