திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (09:16 IST)

மதியத்திற்கு மேல் மாறிய மனசு; திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்!

தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் திமுகவிற்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் கவுன்சிலரான அண்ணாதுரை என்பவரை அதிமுக அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் முடிய இருந்த நிலையில் மதியம் வரை அண்ணாதுரை வேட்புமனு தாக்கல் செய்யவே இல்லை. இதனால் அதிமுக மாவட்ட தலைமை உடனடியாக வேறு ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

இந்நிலையில் அன்று இரவு அதிமுகவிலிருந்து விலகிய அண்ணாதுரை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் திடீரென திமுக தாவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.