தொடரும் விஜய் BMW வரி விவகாரம்; எப்படி அபராதம் போட்டீங்க..? –நீதிமன்றம் கேள்வி
நடிகர் விஜய் பிஎம்டபிள்யூ காருக்கு வரிவிலக்கு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் வரியை செலுத்தாததற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் சில ஆண்டுகள் முன்னதாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு வரியாக 7.98 லட்சம் விதிக்கப்பட்டது. இந்த வரி அதிகமாக இருப்பதாகவும், குறைக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தனி நீதிபதி பாலசுப்ரமணியம் விஜய்யை குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பான தனி வழக்கில் தனி நீதிபதி பேசியது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கு முடிவதற்குள் வரியை கட்டாத காரணத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ.30.23 லட்சத்தை அபராதமாக வணிகவரித்துறை விதித்துள்ளது.
இதுதொடர்பாக நடிகர் விஜய் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடியும் வரை சொகுசு கார் வழக்கில் அபராதம் விதிக்கவும், பிற நடவடிக்கைகள் எடுக்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.