செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (17:57 IST)

சசிகலாவை விளாசி கமல்ஹாசன் எழுதிய கவிதை? - இணையத்தில் பரபரப்பு

கமல்ஹாசனுக்கு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், நடன இயக்குனர் என பல முகங்கள் உண்டு.  ஆனால், பெரும்பாலானோருக்கு தெரியாதது அவருக்குள் இருக்கும் கவிஞர் என்ற முகம்.. 


 

 
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ‘சிங்கமில்லா காடு’ என்ற தலைப்பில் கமல்ஹாசன் எழுதியதாக ஒரு கவிதை உலா வருகிறது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளை படம்பிடித்துக் காட்டும் அந்த கவிதையில் ஜெயலலிதா, சசிகலா, ஓ.பி.எஸ், தீபா என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை.. 
 
செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது..
 
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
 
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
 
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
 
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
 
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
 
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
 
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!
 
என அந்த கவிதை முடிகிறது. ஏராளமானோர் இந்த கவிதையை பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இது தன்னுடைய கவிதையல்ல என கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ Whatsappல்  நீள் கவிதை என் பெயரில் உலாவருகிறது. தவறு செய்தால் ஒப்புக்கொள்வேன். அந்தத் தப்பு எனதல்ல. செய்தவர் துணிந்து மன்னிப்புக் கேட்கவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.