1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2014 (12:06 IST)

ஆவின் பால் கலப்பட முறைகேடு: ஆவின் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி நஷ்டம்

ஆவின் பால் கலப்பட முறைகேட்டால் ஆவின் நிறுவனத்துக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
ஆவின் கூட்டுறவு நிலையங்களில் சேகரிக்கப்படும் பால், சென்னைக்கு கொண்டு வரப்படும் வழியில் திருடப்பட்டு, எடுக்கப்படும் பாலுக்கு நிகரான அளவு  தண்ணீர் அதில் கலக்கப்படுவதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றப்பட்டது.
 
இவ்விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் ஆவின் டேங்கர் லாரி ஒப்பந்ததாரரும், அ.தி.மு.க. பிரமுகருமான வைத்தியநாதன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
 
இதையடுத்து அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தினமும் சுமார் 1,500 லிட்டர் பால் திருடப்பட்டதாகவும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக பால் திருட்டு நடந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்த கணக்கீட்டின்படி, ஆவின் நிறுவனத்திற்கு சுமார் 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்று சிபிசிஐடி அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் வைத்தியநாதனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்யும்போது இதுகுறித்த முழுமையான தகவல்கள் உறுதிப்படுத்தப்படும் என்றும் சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.