1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (21:30 IST)

வாச்சாத்தி வன்கொடுமை - 105 பேருக்குத் தலா ரூ.60 ஆயிரம் நிவாரணம்

வாச்சாத்தி வன்கொடுமைச் சம்பவத்தைத் தொடர்ந்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 105 பேர்களுக்குத் தலா 60,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கிடத் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
 மக்கள் அனைவரையும் அரவணைத்து, யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயல்படுகின்ற அரசு எனது தலைமையிலான அரசு. எனினும் ஒரு சில இடங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் தகுந்த நிவாரணம் வழங்குவதிலும், மறுவாழ்வு அளிப்பதிலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுப்பதிலும் மிகுந்த அக்கறையோடு எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 
 
1992 ஆம் ஆண்டு, தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வாச்சாத்தி கிராமத்தில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் நடந்த சோதனையின் போது, அவ்வூர் மக்களில் சிலர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டனர் என்பதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 407 நபர்களுக்கு 1 கோடியே 44 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தொகுப்பு வீடுகள், குடும்ப அட்டைகள், வீட்டு மின் இணைப்பு, தெரு விளக்கு, விவசாய மின் இணைப்பு, குடிநீர் மின் இணைப்பு, குடிசை மின் இணைப்பு, தொழில் மின் இணைப்பு ஆகியவையும் வழங்கப்பட்டன. 
 
வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் சோதனைக் குழுவைத் தாக்கியதாக வனத் துறை அலுவலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், இந்தச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1999 ஆம் ஆண்டு தருமபுரி காவல் துறையினரால் அரூர் நீதிமன்றத்தில் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த 105 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை ஏதும் நடைபெறாமல் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு அரூர் நீதிமன்றத்தால் 15.11.2012 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
பாதிக்கப்பட்ட 77 நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணத் தொகையான 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை வழங்கிட நான் உத்தரவிட்டதை அடுத்து இதற்கான ஆணை 11.9.2014 அன்று பிறப்பிக்கப்பட்டது. 
 
வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கின் காரணமாக தாங்கள் இதுகாறும் பட்ட இன்னல்களை மனத்தில் கொண்டு தங்களுக்கு கருணை அடிப்படையில் மேலும் கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று என்னை இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிக்கையின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 105 நபர்களுக்கும் தலா 60,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.