வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J Durai
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (13:42 IST)

"காரணம் சொல்பவர் காரியம் செய்ய மாட்டார்"! - பழமொழியை மேற்கோள் காட்டி முதலமைச்சர் உரை!

MK Stalin
கோவை சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செம்மொழி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளில் கீழ் 7 ஆயிரத்து 945 பயனாளிகளிக்கு 110.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


 
 இவ்விழாவில் விழா பேருரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மலை வளங்கள் சூழ்ந்த குளிர்ச்சி பொருந்திய இனிய மாவட்டம் கோவை மாவட்டம். கல்வி வளமும், தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை கொஞ்சும் கொங்கு தமிழை கொண்டது, தமிழ் செம்மொழி மாநாட்டை கண்டது. பலமுறை கோவைக்கு வந்து நலத்திட்டங்களை தொடங்கி வைத்திருந்தாலும் இன்று மக்களுடன் முதல்வர் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

சென்னை, காஞ்சிபுரம்,  செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த நான்காம் தேதி புயலுடன் கூடிய பெருமழை பெய்தது. 47 ஆண்டு காலமாக இல்லாத அளவில் மழை பெய்தது.

அதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும் மழைக்குப் பிறகு போர்கால அடிப்படையிலும் அரசு எதிர்கொண்டு செயல்பட்டது.

கடுமையான மழை ஒரு நாள் முழுக்க பெய்தது மழை நின்றதும் நிவாரண பணிகளை நாம் துவக்கி விட்டோம். மறுநாள் காலையிலே போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.  பெரும்பாலான பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

புறநகரில் நான்கைந்து நாட்களில் இயல்பு நிலை திரும்பியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்தேன். தற்பொழுது தென் மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது. அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்ட அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம் என்பது உறுதி. திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞரின் மகளிர் உரிமை திட்டம், மகளிர் விடியல் பயணம், இல்லம் தேடிக் கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48, புதுமை பெண் திட்டமான பல்வேறு மக்கள் திட்டத்தின் மூலம் சமுதாயத்தில் ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களின் காவலனாய்  திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை எல்லாம் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தை துவக்கி சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டேன்.

அந்த ஆய்வுகள் மூலம் பொதுமக்கள் பயனடைவதை பார்க்க முடிகிறது. பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இன்றி, பெரும்பாலான அடிப்படை சேவைகள் இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் பெரும்பாலும் அணுகுகின்ற துறைகளான வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலன், மாற்றுத்திறனாளிகள் துறை, சிறு குறு நடுத்தர தொழில்துறை, கூட்டுறவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை, எரிசக்தி துறை என 13 அரசு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்படுகிறது. இந்த சேவைகளை பெறுவதில் அடித்தட்டு மக்களுக்கு சிரமம் இருப்பது தெரிய வந்தது. தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தது அந்த சிரமங்களை போக்கி மக்களுக்கு உதவுகின்ற வகையில் துவங்கப்பட்டுள்ள திட்டம் தான் மக்களுடன் முதல்வர் திட்டம். முதல்வரின் முகவரி துறையால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் அனைத்து பொது மக்களுக்கும் அனைத்து சேவைகளும் எளிதாகவும் விரைவாகவும் கிடைக்கச் செய்வது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

MK Stalin

 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களின் சிரமங்களை முன்னாதாகவே கண்டறிந்து அதை எல்லாம் தீர்த்து வைப்பதில் இந்த திட்டம் தனி கவனம் செலுத்தும். அனைத்து கிராமப்புறங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும். இந்த திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும்.

இந்த முகாம்கள் இரண்டு கட்டமாக நடைபெறும் அதன் படி முதல் கட்டமாக புயல் பாதித்த சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள அனைத்து நகராட்சிகள் பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளையும் ஏறத்தாழ 745 முகாம்கள் நடத்தப்படும்.

இன்று இந்த திட்டம் கோவையில் துவக்கி வைத்ததை தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை துவக்கி வைக்கிறார்கள். இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாமில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் அரசால் பரீசிலிக்கப்பட்டு முறையான கோரிக்கையாக இருந்தால் அது நிறைவேற்றி தரப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் மக்களுடன் முதல்வர் இணையத்தில் பதிவு செய்யப்படும். அரசு மீது ஏழைகள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை வலுபட வேண்டும். பொதுமக்கள் கோட்டையை நோக்கி மனு கொடுக்க வருவதை மாவட்ட ஆட்சியர்களும் மாவட்ட அலுவலர்களும் குறைக்க வேண்டும். வட்ட அளவில் முடிய வேண்டியதை அதற்குள்ளும் மாவட்ட அளவில் முடிய வேண்டியதை மாவட்ட அளவிலும் முடிப்பதற்கு போதிய முயற்சிகளை அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். "காரணம் சொல்பவர் காரியம் செய்ய மாட்டார்" என்பது தமிழ் பழமொழிகளில் ஒன்று, ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி கோரிக்கை மனுக்களை தட்டிக் கழித்து விடக்கூடாது. மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மக்கள் சேவகர்கள் ஆகிய நமக்குத்தான் உண்டு.

இந்த விழாவில் செம்மொழி பூங்கா அமைப்பதற்கு கால்கோள் நாட்டப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு கோவை மாநகரில் தமிழறிஞர் கலைஞரால் தமிழ்நாடு அரசின் சார்பில் உலக செம்மொழி மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் நிறைவுறையாற்றிய கலைஞர், 15 அறிவிப்புகளை வெளியிட்டார் அதில் ஒன்றுதான் கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்பது. தாவரவியல் தோட்டத்தை பின்புலமாக வைத்து இந்த செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இயற்கையை தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் அனுபவிக்கவும் ஏற்ற வகையிலும், தாவர இனங்கள் நிலைக்கத்தக்க வகையிலும், நீலகிரி உயிர்க்கோள படுக்கையில் உள்ள அரிய வகை தாவர இனங்களை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் என்ற நோக்கில் இந்த செம்மொழி பூங்கா கோவையில் அமைக்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பிலும் இரண்டாம் கட்டமாக 120 ஏக்கர் நிலப்பரப்பிலும் செம்மொழி பூங்கா அமையப்பட உள்ளது. 133.21 கோடி மதிப்பில் உலக தரத்தில் இந்தியாவிலேயே தனித்துவத்தோடு பல்வேறு சிறப்பம்சங்கள் அடங்கி இருக்கும். இந்த பூங்காவில் செம்மொழி வனம், மகரந்த வனம், மூலிகை வனம், நட்சத்திர வனம், நறுமண வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்படும். இது போன்ற ஒரு சிறப்பான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னையில் கலைஞர் பல்நோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம், கலைஞர் நூற்றாண்டு, ஜல்லிக்கட்டு அரங்கம், சிவகங்கை பகுதியில் கீழடி அருங்காட்சியகம், சேலத்தில் டைடல் பார்க் மற்றும் ஜவுளி பூங்கா திருச்சியில் விளையாட்டு அரங்கம், தஞ்சை சேலம் தூத்துக்குடியில் மினி டைடல் பார்க்குகள், திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம், தூத்துக்குடியில் பன்னாட்டு அறைகலன் பூங்கா இந்த வரிசையில் கோவைக்கு செம்மொழி பூங்கா.

பேரறிஞர் அண்ணா வழியிலும் முத்தமிழர்கள் அறிஞர் கலைஞர் வழியிலும் முதலமைச்சர் பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கக்கூடிய தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பதையே குறிக்கோளாக கொண்டு நான் உழைத்துக் கொண்டு வருகிறேன்.

மக்களுடன் முதல்வர் போன்ற திட்டத்தின் மூலமாக அரசுக்கு மக்களுக்குமான நெருக்கம் அதிகமாகிறது. அரசு வேறு மக்கள் வேறு அல்ல என்பதை உணர்த்துகின்ற திட்டம்தான் இது.இதன் மூலம் மக்களும் மாநிலமும் சேர்ந்து வளருவர். தமிழ்நாட்டை உலகமே வியந்து பார்க்கின்ற மாநிலமாக உருவாக்குகின்ற இலக்கை எனக்கு நானே உருவாக்கிக் கொண்டு உழைத்து வருகிறேன்.

இந்த காட்சியை நாம் விரைவில் காண்போம் என்பது உறுதி என கூறி உரையை நிறைவு செய்தார்.