1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: வெள்ளி, 8 ஆகஸ்ட் 2014 (14:43 IST)

ரூ.4,034 கோடியில் சென்னையில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம்

சென்னையில் மழைக் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்த, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக ரூ.4,034 கோடி மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110இன் கீழ், 2014 ஆகஸ்டு 8ஆம் தேதி அவர் அறிவித்ததாவது:
 
கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டதை அடுத்து, இந்தியாவிலேயே நான்காவது மிகப் பெரிய மாநகராட்சியாகச் சென்னை மாநகராட்சி விளங்குகிறது. இவ்வாறு விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, சென்னையை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்க, சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தினை அறிவித்து, கடந்த மூன்று ஆண்டுகளில் 1,500 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. 
 
இதன் தொடர்ச்சியாக மழைக் காலங்களில் மழைநீர் தேங்காத வண்ணம் சிறந்த வடிகால் வசதிகளை ஏற்படுத்தி வெள்ளப் பெருக்கினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைத் தடுக்க, ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக 4,034 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். 
 
இத்திட்டத்தின் மூலம், சிறிய கால்வாய்களில் உள்ள மழைநீர் பெரிய கால்வாய்களைச் சென்றடைந்து இயற்கை நீர்வழித் தடங்கள், கால்வாய்கள் மற்றும் நதிகள் வழியாக வங்காள விரிகுடா கடலை சென்றடையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக, சென்னை மாநகராட்சியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு 1,101 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடையாறு மற்றும் கூவம் ஆறுகளின் வடிநிலத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடப்பாண்டில் எடுத்துக் கொள்ளப்படும்.
 
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.