திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 ஜனவரி 2020 (13:19 IST)

சென்னையில் குழந்தையை கடத்தியவன் திண்டுக்கலில் சிக்கினான்! – தர்ம அடி கொடுத்த மக்கள்!

சென்னை செண்ட்ரலில் இருந்து குழந்தையை கடத்தி கொண்டு தப்பிய வட மாநில இளைஞனை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

சென்னை செண்ட்ரல் ஸ்டேஷனில் உறங்கி கொண்டிருந்த மர்ஜினா என்பவரது பெண் குழந்தை ரஜிதாவை மர்ம நபர் ஒருவர் தூக்கி சென்றார். தன் குழந்தை காணாமல் போனது குறித்து அவர் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் நபர் ஒருவர் குழந்தையை தூக்கி சென்றது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மும்பை – நாகர்கோவில் விரைவு வண்டியில் பெண் குழந்தையோடு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆசாமி ஒருவர் இருந்திருக்கிறார். குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருக்கவே பயணிகள் அவரை விசாரிக்க ஏதேதோ பதில் சொல்லி மழுப்பி இருக்கிறார். சந்தேகமடைந்த மக்கள் அவரை அடித்து இழுத்து சென்று திண்டுக்கல் ரயில்வே போலீஸிடம் ஒப்படைத்திருக்கின்றனர். விசாரணையில் இவர்தான் குழந்தையை செண்ட்ரலில் திருடியவர் என்பதும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இவர் பெயர் தீபக் மண்டல் எனவும் தெரிய வந்துள்ளது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.